search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ஜினீயரிங் மவுசு குறைந்ததால் கலைக்கல்லூரிகளில் அலைமோதும்  மாணவர்கள் கூட்டம்
    X

    என்ஜினீயரிங் மவுசு குறைந்ததால் கலைக்கல்லூரிகளில் அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

    என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டாததால் கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு மாணவ-மாணவிகள் அதிகளவு கலைக் கல்லூரிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். #artscolleges
    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானதை தொடர்ந்து உயர் படிப்பிற்காக மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். ஆன்லைன் மூலமாக கல்லூரி களுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.

    என்ஜினீயரிங் படிப்பிற்கு கடந்த சில வருடங்களாக மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லை. பி.இ., பி.டெக் முடித்த லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலையில்லாமல் அலைந்து திரிகிறார்கள்.

    உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு குறைந்து விட்டதால் பொறியியல் படிப்பு மீது இருந்த மோகம் படிப்படியாக குறைந்து விட்டது.

    என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்த ஆண்டு மூடப்படுகிறது.

    பல லட்சம் செலவு செய்து 4 ஆண்டுகள் பொறியியல் படித்து முடித்தாலும் அதற்கான வேலையோ, ஊதியமோ கிடைக்காததால் பொறியியல் படிப்பிற்கு பதிலாக கலை-அறிவியல் கல்லூரிகள் பக்கம் மாணவர்கள் நாடிச் செல்கிறார்கள்.

    ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்து போட்டித் தேர்வு எழுதி அரசு வேலைக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான மாணவர்கள் பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி. போன்ற படிப்புகளை தேர்வு செய்கிறார்கள்.

    டி.என்.பி.எஸ்.சி., ரெயில்வே, வங்கி உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் அடிப்படை கல்வித்தகுதி பட்டப்படிப்பாகும். அதனால் இன்றைய மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்புகிறார்கள்.

    தமிழகத்தில் 1500-க்கும் மேற்பட்ட கலை-அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மிக குறைந்த கல்வி கட்டணம் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் ஏழை-எளிய நடுத்தர மாணவர்கள் படிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    91 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், 7அரசு பி.எட் கல்லூரிகளும், 162 அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளும், 17 பி.எட். கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் இடையே பி.ஏ. ஆங்கிலம், பி.காம் (பொது) பட்டப்பிடிப்பிற்கு அதிக மோகம் ஏற்பட்டுள்ளது.

    பிளஸ்-2 தேர்வில் 1000 மதிப்பெண்ணுக்குமேல் எடுத்த மாணவ-மாணவிகள் கூட கலைக்கல்லூரிகளில் பி.காம். படிக்கவே விரும்புகிறார்கள். குறிப்பாக சென்னையில் உள்ள மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான உடனே ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க தொடங்கினர்.

    ஸ்டெல்லா மேரி, கிறிஸ்தவ பெண்கள் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி, மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி (எம்.சி.சி.), லயோலா கல்லூரி, அண்ணா ஆதர்ஷ் கல்லுலூரி உள்ளிட்ட அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.

    அரசு கல்லூரிகளில் ஆன் லைனில் விண்ணப்பிக்கும் முறை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கின்றனர்.



    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளி வருவதற்கு முன்பே விண்ணப்பம் வினியோகம் தொடங்கி விட்டது.

    கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு மாணவ-மாணவிகள் அதிகளவு கலைக் கல்லூரிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அரசு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    பிளஸ்-2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தனியார் கலைக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெறுவதற்கு போட்டி போடுகிறார்கள். பட்டப்பிடிப்புகளுக்கு மாறி வரும் மாணவர்களின் மன நிலையை கருத்தில் கொண்டு தனியார் கல்லூரிகளில் என்ஜினீயரிங் கல்லூரியை போல அதிக கட்டணம் வசூலிக்கவும் செய்கிறார்கள்.

    சென்னையில் மாநில கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி, அம்பேத்கார் கலைக் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கலைக் கல்லூரிகளிலும் மாணவர்களின் கூட்டம் திருவிழா போல காணப்படுகிறது. #artscolleges
    Next Story
    ×