search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் அருகே 3 முறை திருட்டு நடந்த கோவிலில் மீண்டும் கொள்ளை
    X

    கொடைக்கானல் அருகே 3 முறை திருட்டு நடந்த கோவிலில் மீண்டும் கொள்ளை

    கொடைக்கானல் அருகே 3 முறை திருட்டு நடந்த கோவிலில் மீண்டும் கொள்ளை நடந்துள்ளது பக்தர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பெரும்பாறை அருகே கொம்பபட்டியில் காளியம்மன், சந்தனமூர்த்தி கோவில் உள்ளது. நேற்று இரவு கோவிலில் பூஜை முடிந்தபிறகு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    இன்று காலை பக்தர்கள் கோவிலுக்கு சென்றபோது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து பூசாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பொதுமக்கள் அங்கு ஏராளமானோர் குவிந்தனர்.

    கோவிலில் இருந்த 3 அடி உயரம் உள்ள உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. கோவிலின் மற்ற பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை. இது குறித்து தாண்டிக்குடி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முக்கிய தடயங்களை பதிவு செய்தனர். இந்த கோவிலில் கடந்த சில வருடத்திற்கு முன்பு அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருடு போனது. அதன்பிறகு சில மாதங்கள் கழித்து கோவில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த அம்மனின் வெண்கல சிலை மாயமானது.

    அந்த சிலை தண்ணீர் இல்லாத ஒரு தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பிறகு கோவிலின் ஒரு பகுதியில் சேவலை வெட்டி அதன் ரத்தத்தை மர்ம நபர்கள் சுவரில் தடவி விட்டு சென்றனர்.

    தொடர்ந்து 3 முறை கொள்ளை நடந்த கோவிலில் தற்போது மீண்டும் உண்டியல் திருட்டு நடந்திருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இக்கோவிலுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதோடு கொள்ளையர்களையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×