search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக்கத்தில் திரண்டு மறியல்: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் 7 ஆயிரம் பேர் மீது வழக்கு
    X

    சேப்பாக்கத்தில் திரண்டு மறியல்: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் 7 ஆயிரம் பேர் மீது வழக்கு

    புதிய பென்‌ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    புதிய பென்‌ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த நேற்று சென்னையில் திரண்டனர்.

    போலீசாரின் தடையை மீறி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ், ரெயில் மூலம் பகுதி பகுதியாக சென்னை வந்த அவர்கள் சேப்பாக்கத்தில் ஒன்று சேர்ந்த போது போலீசார் கைது செய்தனர்.

    ஆனாலும் அரசு ஊழியர்கள் வாலாஜா சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சாலையில் படுத்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள். அரசு ஊழியர்கள் கோட்டையை நோக்கி எந்த வழியாகவும் செல்ல விடாமல் தடுப்பு வேலி அமைத்து இருந்தனர். பாதுகாப்பில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அரசு ஊழியர்களை கைது செய்து பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

    ஒரே இடத்தில் அடைத்து வைக்காமல் பல இடங்களில் பிரித்து தங்க வைத்து போராட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 7600 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் நேற்றிரவு விடுதலை செய்தனர்.

    ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் மீது 143, 188, 341, 353 ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி கூடுதல், பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் போராட்டத்தில் ஈடுபடுதல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட அனைவரும் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.

    அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறியதாவது:-

    கோட்டை முற்றுகை போராட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. போலீசாரின் எல்லா தடைகளையும் மீறி 15 ஆயிரம் பேர் சென்னையில் திரண்டனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். 200 பஸ்களுக்கு வழங்கப்பட்ட பெர்மிட்டை ரத்து செய்து அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடக்க முயன்றார்கள்.

    100-க்கும் மேற்பட்ட வேன்களில் வந்தவர்களை தடுத்து மறித்தனர். இதையெல்லாம் மீறி இந்த போராட்டம் மிகப் பெரிய வெற்றியை தந்துள்ளது.

    போராட்டத்தை நசுக்க நினைத்த அரசுக்கு அவமானம்தான் ஏற்பட்டுள்ளது. காவல் துறைக்கும் இது ஒரு தோல்வியாகும். எங்களை அழைத்து பேசாமல் இருப்பதே அவமானமாக கருதுகிறோம்.

    எங்களின் அடுத்தகட்ட போராட்டம் இதைவிட தீவிரமாக இருக்கும். திருச்சியில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் உயர்மட்டக்குழுவில் எத்தகைய போராட்டத்தை மேற்கொள்வது என முடிவு செய்து அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×