search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொத்துகுவிப்பு வழக்கில் ரூ.100 கோடி அபராதம் - ஜெயலலிதா சொத்துக்களை கையகப்படுத்த ஆய்வு
    X

    சொத்துகுவிப்பு வழக்கில் ரூ.100 கோடி அபராதம் - ஜெயலலிதா சொத்துக்களை கையகப்படுத்த ஆய்வு

    சொத்துகுவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அவரது சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான ஆய்வு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். #Jayalalithaa
    சென்னை:

    ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சராக 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக்கள் வாங்கி குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சொத்துக் குவிப்பில் கூட்டு சதி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுமார் 20 ஆண்டுகள் நடந்த அந்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வெளியிட்டது.

    ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் 4 பேரும் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. ஆனால் ஜெயலலிதா 2016-ம் ஆண்டே இறந்து விட்டதால் அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.



    சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி அவர்கள் மூவரும் பெங்களூர் பரப்பன அக்ரகார மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் 4 ஆண்டு ஜெயில் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை எப்படி வசூல் செய்வது என்ற சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்த கர்நாடகா மாநில அரசு, “ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தது.

    இதைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிரடி நடவடிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு தொடங்கியது. முதல் கட்டமாக அவர்கள் தமிழ் நாட்டில் எங்கெங்கு, எவ்வளவு சொத்துக்கள் வாங்கி சேர்த்துள்ளனர் என்ற விபரங்களை சேகரித்தனர்.

    அப்போது சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், நெல்லை, தஞ்சை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் ஏராளமான சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 128 சொத்துக்கள் ஏற்கனவே அரசாணைகள் மூலம் முடக்கி கையகப்படுத்தப்பட்டது. முதலில் அந்த சொத்துக்கள் அனைத்தும் தற்காலிகமாக கையகப்படுத்தப்பட்டிருந்தது.

    அந்த 128 சொத்துக்களில் 68 சொத்துக்கள் முறைகேடாக சம்பாதித்து வாங்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. எனவே அந்த 68 சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசுக்கு சொந்தமானதாக மாற்றும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த 68 சொத்துக்களும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், நெல்லை, தஞ்சை, நீலகிரி மாவட்டங்களில் மிக முக்கியமான இடங்களில் இருக்கின்றன.

    ஜெயலலிதா 1991-1996-ம் ஆண்டு முதல்வராக இருந்த போது சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் முறைகேடாக பணம் சம்பாதித்து 6 நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தனர். எலக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட், மெடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரி பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், ரிவர்வே அக்ரோ பிராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோகா கெமிக்கல்ஸ் பார்ம சூட்டிகல்ஸ் லிமிடெட் ஆகியவையே அந்த 6 நிறுவனங்களாகும்.

    போலியாக தொடங்கப்பட்டிருந்த இந்த 6 நிறுவனங்கள் மூலம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரும் தங்கள் வங்கி கணக்குகளில் பணப்பரிமாற்றம் செய்தனர். எனவே அந்த 6 நிறுவனங்களின் பெயரில் உள்ள அசையா சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    அதன் பேரில்தான் கடந்த ஆண்டே ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரின் 68 சொத்துக்களையும் ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் இந்த நடவடிக்கையை மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை செய்தது.

    இதற்கிடையே ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் மற்ற சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. நாளடைவில் ஜெயலலிதா சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டவில்லை.

    ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரின் 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்ட போதிலும் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. இதுபற்றி சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் 68 சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசுடமையாக்க தற்போது அதிரடி நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

    அந்த 68 சொத்துக்களையும் பறிமுதல் செய்த பிறகு அது, ரூ.100 கோடி அபராதத்துக்கு ஈடுகட்டப்படுமா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளது. ரூ.100 கோடி அபராதத்தை ஈடுகட்ட அவை பறிமுதல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    முறைகேடாக, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வாங்கப்பட்ட சொத்துக்கள் என்பதால் 68 சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு அரசின் பெயருக்கு மாற்றப்பட உள்ளது. அந்த 68 இடங்களிலும் “இது தமிழக அரசுக்கு சொந்தமான இடம்” என்று அரசு சார்பில் போர்டுகள் வைக்கப்படும்.

    அந்த 68 சொத்துக்களையும் விற்கவோ அல்லது ஏலம் விட்டு பணம் திரட்டவோ அரசுக்கு அதிகாரம் இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    அந்த 68 சொத்துக்களிலும் எவ்வளவு இடங்கள், எங்கெங்கு உள்ளன, அவற்றின் தற்போதைய மதிப்பு எவ்வளவு? அவற்றில் அரசுத் துறை கட்டிடங்கள் கட்டலாமா? வேறு எந்த வகையில் அந்த நிலங்களை அரசு பயன்படுத்தலாம்? என்ற ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 68 இடங்களையும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    இந்த ஆய்வுப் பணிகள் எப்போது நிறைவு பெறும் என்று தெரியவில்லை. ஆய்வுப் பணிகள் முடிந்ததும் 68 சொத்துக்களையும் பறிமுதல் செய்வதற்கான அரசாரணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.

    அதன்பிறகு அந்த 68 சொத்துக்களும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் இருந்து தமிழக அரசின் கைக்கு வந்து விடும். பறிமுதல் நடவடிக்கை முழுமையாக முடிந்த பிறகு அதுபற்றி தமிழக அரசு கோர்ட்டில் முறைப்படி தெரிவிக்கும்.

    அதன் பிறகு ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதம் தொகையை எப்படி வசூலிப்பது என்பது பற்றி தெரிய வரும். #Jayalalithaa #DAcaseVerdict #JayaConvicted
    Next Story
    ×