
நேரு பூங்கா- சென்ட்ரல், சைதாப்பேட்டை, டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் வழித்தடத்தினை பாதுகாப்பு கமிஷனர் வருகிற 14, 15-ந்தேதிகளில் ஆய்வு செய்கிறார். அதை தொடர்ந்து 2 வாரத்தில் மெட்ரோ ரெயில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது.
கோயம்பேடு- ஆலந்தூர்- சின்னமலை விமான நிலையம் இடையே உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம்- நேரு பூங்கா இடையே சுரங்க பாதையிலும் மெட்ரோ பயணிகள் சேவை தற்போது நடந்து வருகிறது.
பொதுமக்களின் வரவேற்பையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. நேரு பூங்கா- சென்ட்ரல் 2.7 கி.மீட்டர் தூரபணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அதே போல சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். 4 கி.மீட்டர் வழித்தடத்திலும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

அடுத்த வாரம் 14, 15-ந்தேதிகளில் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்கிறார். அதை தொடர்ந்து அவர் அனுமதி அளித்ததும் மெட்ரோ ரெயில் ஓடும்.
சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் நுழைவு பாதைள் கட்டுமான பணியில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே மெட்ரோ ரெயில் இயக்க 2 வாரத்திற்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ட்ரல் ரெயில் நிலைய பணிகள் முடிந்ததும் விமான நிலையத்துக்கு நேரடியாக மெட்ரோ ரெயிலில் பயணிகள் செல்ல முடியும். அதே போல டி.எம்.எஸ். ரெயில் நிலையத்தில் இருந்தும் விமான நிலையத்துக்கு செல்லலாம். #ChennaiMetroTrain