search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 22 பேர் கைது
    X

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 22 பேர் கைது

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 22 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
    சேலம்:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

    அதற்காக மாநிலம் முழுவதும் இருந்து நேற்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவர்களை வழியில் மறித்து கைது செய்தனர். மேலும் ஜாக்டோ-ஜியோ முக்கிய நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் கைது செய்யப்பட்டனர்.

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கோவிந்தன் (50) நேற்று பேர்லேண்ட்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதே போல ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளான ஏற்காடு பால்ராஜ் (51), தலைவாசல் திருமுருகவேல் (52), மேச்சேரி கலையரசன் (43), அண்ணாதுரை (48), கொளத்தூர் பிரபு (43), செல்வராஜ் (33), வாழப்பாடி அர்ஜூணன் (49), ஸ்ரீதர் (44), முரளி (45), சங்ககிரி பசுபதி (53) ஆகிய 11 பேர் அந்தந்த பகுதி போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.

    நாமக்கலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவுபடி, டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரபிரசாத், மோகனூரை சேர்ந்த பாலகிருஷ்ணன், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பாலன் உள்பட 11 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் அந்த அந்த போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் வீட்டிற்கு சென்று போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்ட 11 பேரும் இன்று மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.

    Next Story
    ×