search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்டிரல் , எழும்பூருக்கு மெட்ரோ ரெயில் எப்போது இயக்கப்படும்? பயணிகள் எதிர்பார்ப்பு
    X

    சென்டிரல் , எழும்பூருக்கு மெட்ரோ ரெயில் எப்போது இயக்கப்படும்? பயணிகள் எதிர்பார்ப்பு

    சென்டிரல், எழும்பூர் பகுதியில் மெட்ரோ ரெயில் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
    சென்னை:

    சென்னையில் நேரு பூங்கா-விமான நிலையம், ஆலந்தூர்-பரங்கிமலை, விமான நிலையம்-சின்னமலை ஆகிய இடங்கள் இடையே தற்போது மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நேரு பூங்கா-விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு ஒரு வருடம் ஆகப்போகிறது. ஆனால் இன்னும் இந்த மெட்ரோ ரெயில் போக்குவரத்து சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் வரை நீட்டிக்கப்படவில்லை.

    சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் நேரு பூங்கா உள்ளது. இதனால் நேரு பூங்காவில் இருந்து சென்டிரல், எழும்பூர் செல்வதாக இருந்தால் பயணிகள் மினிபஸ், மாநகர பஸ் அல்லது ஆட்டோக்களை நாடிச்செல்ல வேண்டி இருக்கிறது. எனவே சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையம் வரை மெட்ரோ ரெயில் எப்போது இயக்கப்படும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் இடம் மற்றும் ரெயில் நிலைய கட்டுமான பணிகள் முடிவடைந்து திறப்பதற்கு தயார் நிலையில் இருக்கும் காட்சி.


    எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வாகன நிறுத்தும் இடங்கள், ஓட்டல் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    நேரு பூங்காவில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு இடைப்பட்ட 3 கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முற்றிலுமாக நிறை வடைந்துவிட்டன. தற்போது சோதனை ஓட்டம் நடந்துவருகிறது.

    குறிப்பாக எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு பின்புறம் உள்ள 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் 50 அடி ஆழத்தில் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 8 ஆயிரம் சதுர மீட்டர் ரெயில் போக்குவரத்துக்காகவும், எஞ்சிய 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு பயணிகள் சேவைக்கான இடமாகவும் அமைக்கப்பட்டு உள்ளது.

    எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு உள்ளே செல்வதற்கு பயணிகள் வசதிக்காக 4 வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. எழும்பூர் ரெயில் நிலையத்தின் முன்புறம் இருக்கும் உயர்மட்ட நடைபாதை அருகில் 2 வாசல்களும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு வாசலும், எழும்பூர் ரெயில் நிலையத்தின் பின்புறம் உள்ள பஸ் நிலையம் அருகில் ஒரு வாசலும் அமைக்கப்பட்டு உள்ளன.


    பயணிகளுக்கான நகரும் படிக்கட்டு தயாராக உள்ளது.

    இந்த ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்காக 2 லிப்டுகளும், 3 நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. டிக்கெட் கவுண்ட்டர்கள், பயணிகள் அமரும் பகுதி போன்றவை நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. தரைதளத்தில் உள்ள 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவின் ஒரு பகுதியில் வாகன நிறுத்தும் இடம் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    பயணிகளின் பாதுகாப்பு கருதி தண்டவாளத்தையும், பிளாட்பாரத்தையும் மறைக்கும் வகையில் ஸ்டீல் கதவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. ரெயில் வந்து நின்ற உடன் ரெயிலில் உள்ள கதவும், பிளாட்பாரத்தில் உள்ள கதவுகளும் ஒரேநேரத்தில் திறக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன.

    பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பின்னரே இந்த பாதையில் மெட்ரோ ரெயில் இயக்க முடியும். இந்த வழித்தடத்தில் செய்துமுடிக்கப்பட்ட பணிகள் குறித்து பாதுகாப்பு ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் மே மாதம் முதல் வாரத்தில் ஆய்வு செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே மே மாத இறுதியில் இந்த பாதையில் மெட்ரோ ரெயில் போக்கு வரத்து தொடங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 
    Next Story
    ×