search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி மாணவிகளிடம் இன்று 2-ம் கட்ட விசாரணையை தொடங்கினார் சந்தானம்
    X

    கல்லூரி மாணவிகளிடம் இன்று 2-ம் கட்ட விசாரணையை தொடங்கினார் சந்தானம்

    பேராசிரியை நிர்மலா தேவியிடம், சந்தானம் சுமார் 8 மணி நேரம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இன்று கல்லூரி மாணவிகளிடம் 2-ம் கட்டமாக சந்தானம் விசாரணை தொடங்கினார். #NirmalaDevi
    மதுரை:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் பாலியல் ரீதியாக செல்போனில் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.

    மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் நேற்று காலை 9.30 மணி முதல் சுமார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார்.

    விசாரணையின் போது பேராசிரியைகள் கமலி, தியாகேசுவரி ஆகியோரும் உடன் இருந்தனர். சிறைத்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்ட இந்த விசாரணை விவரங்கள் அனைத்தும் எழுத்துப் பூர்வமாக பெறப்பட்டது. வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.

    கடந்த 2008-ம் ஆண்டு பேராசிரியை பணியில் சேர்ந்தது முதல் இதுவரை நடைபெற்ற முக்கிய சம்பவங்களை நிர்மலா தேவியிடம், சந்தானம் எழுத்துப்பூர்வமாக கேட்டு பெற்றார்.

    மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் புத்தாக்கப் பயிற்சி தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்ட சந்தானம், உயர் அதிகாரிகளின் தொடர்புகள் குறித்தும், அவர்களது பெயர்களையும் விரிவாக சொல்லும்படி நிர்மலா தேவியிடம் கேட்டார்.


    அப்போது பல கேள்விகளுக்கு மழுப்பலான பதிலையே நிர்மலா தேவி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    பல்கலைக்கழக தேர்வுத் துறை அதிகாரிகள் சிலரின் நடவடிக்கைகள் குறித்தும் நிர்மலா தேவியிடம், சந்தானம் விசாரணை நடத்தினார்.

    இந்த கேள்விகளுக்கும் நேரடியாக நிர்மலா தேவி பதில் அளிக்கவில்லை. சில கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் அளித்துள்ளார்.

    நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டு அவரிடம் கையெழுத்து பெறப்பட்டது.

    இந்த நிலையில் நிர்மலா தேவி செல்போனில் பேசியதாக கூறப்படும் கல்லூரி மாணவிகளிடம் 2-ம் கட்டமாக விசாரணை நடத்த சந்தானம் திட்டமிட்டார்.

    இதற்காக மதுரையில் இருந்து இன்று காலை அருப்புக்கோட்டை புறப்பட்டுச் சென்றார். தேவாங்கர் கல்லூரியில் வைத்து நடைபெறும் விசாரணையில் கல்லூரி நிர்வாகிகள், மாணவிகள் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்த சந்தானம் திட்டமிட்டுள்ளார். நிர்மலா தேவி தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் ஒப்படைக்கும் படியும் சந்தானம் குழுவினர் கேட்டுள்ளனர்.

    எனவே சம்பந்தப்பட்ட மாணவிகள், நிர்மலா தேவி தொடர்பான பல்வேறு ஆதாரங்களை திரட்டியுள்ளனர். அதனையும் சந்தானத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

    அதிகாரி சந்தானம் 15 நாட்களில் விசாரணை முடித்து அறிக்கையை தாக்கல் செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.

    ஆனால் விசாரணை வளையம் விரிந்து செல்வதால் கூடுதல் அவகாசம் கேட்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    ஏற்கனவே காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், கல்லூரி கல்வி இணை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியுள்ள சந்தானம் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்.

    எனவே இன்னும் 2 வாரங்கள் விசாரணை நடத்திய பிறகே இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க சந்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    நிர்மலா தேவி விவகாரத்தில் உள்ள கிரிமினல் புகாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் பல்கலைக்கழக தொடர்புகள் குறித்து அதிகாரி சந்தானம் நடத்தி வரும் விசாரணை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. #NirmalaDeviAudio #Santhanam
    Next Story
    ×