search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா விவகாரத்தில் குற்றச்சாட்டு- 23 போலீஸ் அதிகாரிகள் கலக்கம்
    X

    குட்கா விவகாரத்தில் குற்றச்சாட்டு- 23 போலீஸ் அதிகாரிகள் கலக்கம்

    குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 23 போலீஸ் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். #GutkhaScam
    சென்னை:

    குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் சென்னையில் அமோகமாக விற்பனை செய்யப்படுவது கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் அம்பலத்துக்கு வந்தது.

    கடந்த 2013-ம் ஆண்டு குட்காவுக்கு ஜெயலலிதா தடை விதித்தார். சட்டசபையில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார். இதன் பின்னர் மாநிலம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் பெயரளவுக்கு நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் நாளடைவில் அதற்கான சோதனை, விசாரணை எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாகவே மாறிப்போனது. இதன் பின்னர் குட்கா விற்பனை சர்வ சாதாரணமானது. போலீஸ் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாக கொடுத்து விட்டு குட்கா விற்பனையாளர்கள், தங்களது விற்பனையை தடையின்றி தொடர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுபற்றி தகவலின் பேரிலேயே கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரிதுறை அதிகாரிகள் சென்னையில் அதிரடி சோதனை நடத்தினர். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 3 இடங்களில் நடந்த இந்த சோதனை அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செங்குன்றம் அருகே உள்ள பாலவாயல் சோத்துப்பாக்கத்தில் உள்ள குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. டைரி ஒன்றும் சிக்கியது.

    இதில் உயர் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. மொத்தம் 23 போலீஸ் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் லஞ்சம் கொடுக்கப்பட்டதும். அவர்களின் பெயரும் அதில் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒருசில அதிகாரிகள் மீது வழக்கும் போட்டுள்ளனர்.

    இப்போது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் 23 போலீஸ் அதிகாரிகளும் கலக்கம் அடைந்துள்ளனர். போலீஸ் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரணை நடைபெறும்பட்சத்தில் குட்கா விவகாரத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளி யாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #Gutka
    Next Story
    ×