search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு எழுதும் தென்மாவட்ட மாணவர்களுக்கு கேரளாவில் மையம் - சி.பி.எஸ்.இ. பதில் அளிக்க உத்தரவு
    X

    நீட் தேர்வு எழுதும் தென்மாவட்ட மாணவர்களுக்கு கேரளாவில் மையம் - சி.பி.எஸ்.இ. பதில் அளிக்க உத்தரவு

    நீட் தேர்வு எழுதும் தென்மாவட்ட மாணவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சி.பி.எஸ்.இ. பதில் மனுதாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது. #CBSE #NEET
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வேளச்சேரியை சேர்ந்த வக்கீல் காளிமுத்து மயிலவன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தேசிய அளவிலான ‘நீட்’ தேர்வு வருகிற மே 6-ந்தேதி நடைபெறவுள்ளது.

    இத்தேர்வுக்கான அறிவிப்பில் தங்களது மாநிலத்தில் ஏதேனும் மூன்று தேர்வு மையங்களை குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்கள் மொழி தெரியாத பிற மாநிலங்களுக்கு தேர்வு எழுதச் செல்ல நேரிடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். மாணவர்கள் மன அழுத்தத்துடன் தேர்வை எதிர்கொள்ள நேரிடும்.

    எனவே, தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய சி.பி.எஸ்.இ. இயக்குனக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுவை நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், நீதிபதி தண்டபாணி ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த மனுவுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கு நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். #CBSE #NEET
    Next Story
    ×