search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டுறவு சங்க தேர்தல் முடிந்ததும் - உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டம்
    X

    கூட்டுறவு சங்க தேர்தல் முடிந்ததும் - உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டம்

    கூட்டுறவு சங்க தேர்தல் முடிந்ததும், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #LocalBodyElections ##CooperativeUnionElection

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்து 1½ வருடம் ஆகியும் இன்னும் தேர்தல் நடைபெறாமல் உள்ளது.

    உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு ஏற்கனவே கடந்த ஆண்டு முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில் இடஒதுக்கீடுபடி நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டது.

    அதன்பிறகு வார்டு மறுவரைப்படி தேர்தலை நடத்த ஏற்பாடு செய்வதாக அரசு அறிவித்தது. அதற்கான பணிகளையும் செய்து வந்தது.

    இதன்பிறகு ஒவ்வொரு காரணங்களுக்காக தேர்தல் நடைபெறாமல் போனதால் தனி அதிகாரிகளின் பதவி காலம் 6 மாதங்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், மட்டுமின்றி எதிர் கோஷ்டியில் தினகரன் ஆதரவாளர்கள் என 3 பிரிவாக உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கினால் தி.மு.க. எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று பரவலாக பேசப்படுகிறது.

    இதை தவிர்ப்பதற்காகவே உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசு தள்ளி வைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்த சூழ்நிலையில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளதால் அந்த பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கும் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றது. இறுதியில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதனால் மீண்டும் கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடைபெற தொடங்கி உள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் குறித்து மாநில தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டதற்கு அரசு வழிகாட்டுதலின்படி தேர்தலை நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறி வருகின்றனர்.

    ஜூன் மாதம் மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டசபை கூடும் என்பதால் ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியில் கடமையாற்றும் ஒவ்வொரு தொண்டனுக்கும் உயர்வுண்டு. இதனை உள்ளாட்சி தேர்தல் விரைவில் உலகுக்கே சொல்லும் என்று எழுதப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் வருவதை கட்சிக்காரர்களும் உறுதிப்படுத்தி வருகின்றனர். #LocalBodyElections ##CooperativeUnionElection

    Next Story
    ×