search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியர் முருகன்
    X
    பேராசிரியர் முருகன்

    நிர்மலாதேவி விவகாரம்: மேலும் சில பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் தொடர்பு- கைதான முருகன் தகவல்

    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் மேலும் சில பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கைதான உதவி பேராசிரியர் முருகன் தெரிவித்துள்ளார். #NirmalaDevi
    விருதுநகர்:

    கல்லூரி மாணவர்களை தவறான பாதைக்கு அழைக்கும் விதமாக செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

    அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர்.

    இதில் உதவி பேராசிரியர் முருகன், பல்கலைக்கழக வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்தபோது சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார். அவருக்கு சம்மன் வழங்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    கடந்த 2 நாட்களாக விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    அவர் மீது குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்ததால் நேற்று இரவு பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார்.

    அவரை ஒரு நாள் காவலில் வைக்க சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கீதா உத்தரவிட்டார்.


    இதனைத் தொடர்ந்து பேராசிரியர் முருகன், விருதுநகரில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இன்று கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தும் போது, காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

    நிர்மலா தேவி வாக்கு மூலத்தின் அடிப்படையில், பேராசிரியர் முருகனை பிடித்து விசாரணை நடத்தினோம். முதலில் அவர், தனக்கு எதுவும் தெரியாது என்றே கூறி வந்தார். அதன் பிறகு நிர்மலா தேவியிடம் அவர் அடிக்கடி பேசியதற்கான தொலைபேசி அழைப்பு ஆவணங்களை காண்பித்தோம்.

    இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்கத் தொடங்கினார். இந்த விவகாரத்தில் எனக்கு மட்டுமல்ல, வேறு சில பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது என தெரிவித்தார்.

    மேலும் பேராசிரியர் முருகன், பல்கலைக்கழகத்திற்குட்பட்ட வேறு சில கல்லூரிகளிலும் தவறான செயல்பாடு வைத்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

    இது குறித்து இன்னும் பல தகவல்களை அவரிடம் விசாரிக்க வேண்டி உள்ளதால், அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு செய்ய உள்ளோம்.

    இதே போல் நிர்மலா தேவியின் 5 நாள் போலீஸ் காவலும் இன்று மதியம் 2.30 மணியோடு முடிவடைகிறது.

    அவரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளோம். இன்னும் சில தினங்களில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிர்மலா தேவி வழக்கை விரைந்து முடிக்கும் நோக்கில் 9 தனிப்படை அமைத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது.

    தேவாங்கர் கலைக்கல்லூரி செயலாளர் ராமசாமி, பேராசிரியர் கந்தசாமி ஆகியோரை நேற்று மீண்டும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த தங்கப் பாண்டியன் என்பவருக்கும் சி.பி.சி.ஐ.டி. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் நேற்று விசாரணைக்கு வந்தார்.

    இவர், தலைமறைவான கருப்பசாமியின் நண்பர் என கூறப்படுகிறது. பேராசிரியர் முருகன், பேராசிரியை நிர்மலா தேவி ஆகியோருடன், தங்கப்பாண்டியன் அடிக்கடி செல்போனில் பேசியிருப்பது தெரியவந்ததால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இரவு வரை நீடித்த விசாரணை இன்றும் தொடர்கிறது. #NirmalaDeviAudio #Murugan
    Next Story
    ×