search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்
    X

    பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்

    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள், வழக்கறிஞர்கள் மூலம் விசாரணை அதிகாரி சந்தானத்திடம் இன்று புகார் அளித்தனர். #NirmalaDevi
    மதுரை:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் 9 குழுக்களாக பிரிந்து அருப்புக்கோட்டை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட இடங்களில் நிர்மலா தேவி தொடர்பாக விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    இதனிடையே நிர்மலா தேவியுடன் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார். ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியையும் பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனிடையே கவர்னர் நியமித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்தானம், நிர்மலா தேவி விவகாரம் குறித்து கடந்த 18-ந் தேதி முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்.

    பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகிகள், மாணவிகளிடம் 3 நாட்களாக சந்தானம் விசாரணை நடத்தினார்.

    இதையடுத்து சென்னை சென்ற அவர் இன்று காலை மதுரை வந்தார். மதுரை அழகர் கோவில் ரோட்டில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சந்தானம் 2-ம் கட்ட விசாரணையை இன்று தொடங்கினார்.



    அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவிகள், நிர்மலா தேவி மீது புகார் தெரிவித்து சந்தானத்திடம் மனுக்களாக அளித்தனர்.

    அந்த மனுக்களை மாணவிகளின் சார்பில் மதுரையைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், சந்தானத்திடம் வழங்கினார். இது தொடர்பாகவும் சந்தானம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்.

    மேலும் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெறவும் சந்தானம் திட்டமிட்டுள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த அதிகாரி சந்தானம் திட்டமிட்டுள்ளார்.

    அதற்காக தனது உதவியாளர்கள், பேராசிரியைகள் கமலி, தியாகேசுவரி ஆகியோருடனும் சந்தானம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தின் விசாரணை வளையங்களும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. #NirmalaDeviaudio
    Next Story
    ×