search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

    நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.
    நாகர்கோவில்:

    29-வது சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் நேற்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நாகர்கோவில், மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடந்தது.

    வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணிக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முருகன் (நாகர்கோவில்), பழனிசாமி (மார்த்தாண்டம்) ஆகியோர் தலைமை தாங்கினர். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரபாகரன் (நாகர்கோவில்), கனகவல்லி (மார்த்தாண்டம்), நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜான் ஒய்ஸ்லின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் வழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    “சாலை பாதுகாப்பு- உயிர் பாதுகாப்பு” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடந்த இந்த பேரணி, வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து, உழவர் சந்தை, பாலமோர் ரோடு வழியாக மணிமேடை சந்திப்பு பகுதியில் நிறைவடைந்தது. இதில் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து ஊழியர்கள், அரசு ஓட்டுனர் பயிற்சி பள்ளி மாணவர்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை ஏஜென்சி நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    பேரணியில் கலந்து கொண்டவர்கள், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் பிடித்திருந்தனர். 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தவாறும், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களின் ஓட்டுனர்கள் சீட்பெல்ட் அணிந்தவாறும் அணிவகுத்து சென்றனர்.

    பேரணியின் போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. 
    Next Story
    ×