search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது - கருத்து கணிப்பில் தகவல்
    X

    கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது - கருத்து கணிப்பில் தகவல்

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை, என்று டைம்ஸ் நவ்- வி.எம்.ஆர். நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. #KarnatakaElections2018
    ஓசூர்:

    அதேசமயத்தில், தேவகவுடா, குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதள கட்சி, கர்நாடகாவில் அமையவுள்ள ஆட்சியை நிர்ணயம் செய்யும் கிங் மேக்கராக திகழும் என்று கூறப்பட்டுள்ளது.

    டைம்ஸ் நல் கருத்துக் கணிப்பின்படி, மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 91 இடங்களிலும், பா.ஜ.க. 89 இடங்கள் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கு 40 இடங்களும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது என தெரிய வந்துள்ளது. ஏப்ரல் 4-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    கருத்து கணிப்பில், மத்திய கர்நாடகா பகுதியில் பா.ஜ.க.விற்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். அதாவது, கடந்த 2013 தேர்தலில் மத்திய கர்நாடகா பகுதியில், வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ.க., மொத்தமுள்ள 35 தொகுதிகளில், இம்முறை 22 தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.



    அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களே கிடைக்குமாம். மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கு, 3 இடங்கள் கிடைக்கும்.

    கடலோர கர்நாடக பகுதியில், பா.ஜ.க. 8 இடங்களையும், காங்கிரஸ் 11 இடங்கள், மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கு 2 இடங்களும், பெங்களூரு மாநகரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள், பா.ஜ.க.விற்கு 13 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

    ஐதராபாத் கர்நாடகா பகுதியில் பா.ஜ.க.விற்கு 15, காங்கிரஸ் கட்சிக்கு 12 மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கு 3 இடங்களும், மும்பை கர்நாடகா பகுதியில் பா.ஜ.க. 23 இடங்களையும், காங்கிரஸ் 21 மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் 5 இடங்களையும், அலே மைசூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி 20 இடங்களையும், பா.ஜ.க. 8 மற்றும் மதசார் பற்ற ஜனதாதளம் 25 இடங்களையும் கைப்பற்றும் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

    முதல் மந்திரி பதவிக்கு தகுதியானவர் யார்? என்ற கேள்விக்கு சித்தராமையா 46.15 சதவீத ஆதரவுடன் முதல் இடத்தில் உள்ளார். எடியூரப்பா-31.76 சதவீதம் பேரின் ஆதரவை பெற்றுள்ளார்.



    குமாரசாமி-17.63, பரமேஸ்வர் 0.95, மல்லிகார் ஜூன கார்கே-0.7, கே.எஸ்.ஈஸ்வரப்பா-0.44 மற்றவர்கள் 2.37 சதவீதம் எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பின்படி பார்த்தால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. 2013-ம் ஆண்டு தேர்தலில் 122 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு இந்த தடவை 91 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டு இருப்பதால் சுமார் 30 இடங்களை காங்கிரஸ் இழக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதே சமயத்தில் 2013-ம் ஆண்டு தேர்தலை விட இந்த தடவை சுமார் 50 இடங்களை பா.ஜ.க. கூடுதலாக பெறும் என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஏ.பி.பி.-சி.எஸ்.டி.எஸ். எனும் நிறுவனம் நடத்திய கருத்து கணப்பிலும் கர்நாடகா சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. தொங்கு சட்டசபையே அமைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. என்றாலும் பா.ஜ.க.வுக்கு அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

    மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பா.ஜ.க. 89 முதல் 95 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 85 முதல் 91 இடங்கள் வரையும் தேவேகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 32 முதல் 38 இடங்கள் வரை கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த கருத்து கணிப்பு முடிவுகளை முதல்- அமைச்சர் சித்தராமையா ஏற்க மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

    காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த யுத்தத்தில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். என்னைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு 130 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் நான் முதல்-அமைச்சர் ஆவேன் என்றார்.

    எடியூரப்பாவும் தாங்கள் 150 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார். #KarnatakaElections2018
    Next Story
    ×