search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை: கொள்ளையனின் கூட்டாளிகள் யார்?
    X

    வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை: கொள்ளையனின் கூட்டாளிகள் யார்?

    சென்னை அடையாறில் துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையடித்த வங்கி கொள்ளையனின் கூட்டாளிகள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கடந்த மாதம் 26-ந் தேதி கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி, 2 லாக்கர்களை வெல்டிங் கருவி மூலம் உடைத்து 130 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    இந்த கொள்ளை சம்பவத்தில் மேற்கண்ட வங்கி செயல்படும் கட்டிடத்தின் காவலாளியாக பணிபுரிந்த நேபாள நாட்டைச் சேர்ந்த சபிலால் என்பவர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. நேபாள நாட்டுக்கு தப்பிச்சென்ற அவரை கைது செய்து சென்னை அழைத்து வர, சர்வதேச போலீஸ் உதவி நாடப்பட்டு உள்ளது. சபிலாலுக்கு துணைபுரிந்த டாப் பகதூர், பிரதாப் ஆகியோர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.



    இந்த நிலையில் நேற்று சென்னை அடையாறு இந்திராநகரில் பட்டப்பகலில் இந்தியன் வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சத்து 36 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.

    கொள்ளை சம்பவம் நடந்த இந்தியன் வங்கி கிளை சென்னை அடையாறு இந்திராநகர் 1-வது அவென்யூவில் உள்ளது. இந்த பகுதி பெரும் பணக்காரர்கள் வாழும் முக்கிய பகுதி ஆகும். இந்த வங்கியின் மேலாளராக முகமது அஷ்ரப் என்பவர் பணியாற்றுகிறார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

    நேற்று மதியம் 12.45 மணி அளவில் வங்கி ஊழியர்கள் 5 பேர் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். வங்கி மேலாளர் முகமது அஷ்ரப் தனது அறையில் அமர்ந்து பணிகளை கவனித்துக்கொண்டு இருந்தார். 5 வாடிக்கையாளர்கள் வங்கியில் நின்றுகொண்டு இருந்தனர்.

    அப்போது தலையில் ஹெல்மெட் அணிந்து மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் (மோட்டார் சைக்கிள் எண் : டி.என்.22 - பி.யு.9355) வந்தார். வங்கியின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர், நேராக வங்கிக்குள் புகுந்தார்.

    வங்கி மேலாளர் அறைக்கு சென்ற அந்த நபர் ஹெல்மெட்டை கழற்றாமலேயே, மேலாளர் முகமது அஷ்ரப்பிடம் இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசினார். ‘எனக்கு பெரிய அளவில் கடன் தொகை தேவைப்படுகிறது. கடன் வழங்குவதற்கான விதிமுறைகள் பற்றி நான் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று அவர் கூறினார்.

    அவர் ஹெல்மெட்டை கழற்றாமல் பேசியதால் மேலாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ‘முதலில் தலையில் இருக்கும் ஹெல்மெட்டை கழற்றுங்கள். இருக்கையில் உட்காருங்கள். அதன்பிறகு கடன்உதவி பெறுவது குறித்து பேசலாம்’ என்று மேலாளர் கூறினார்.

    உடனே அந்த மர்ம நபர் ஆவேசமாக கூச்சலிட்டவாறு, தனது பேண்ட் பாக்கெட்டுகளில் இருந்து 2 கைத்துப்பாக்கிகளை எடுத்து மேலாளரின் நெஞ்சில் வைத்து மிரட்ட ஆரம்பித்தார். ‘அடுத்த ½ மணி நேரம் நீங்கள் எதுவும் பேசக்கூடாது. நான் சொல்வதை மட்டும் செய்யவேண்டும்’ என்றார். ஒரு துணிப்பையை கொடுத்து, ‘இந்த பை நிறைய பணத்தை நிரப்பி கொடுங்கள்’ என்று கட்டளையிட்டார்.

    மேலாளரும் எந்த பதிலும் பேசாமல் மர்ம நபர் கொடுத்த பையை வாங்கிக்கொண்டு, கேஷியரின் அறைக்கு சென்றார். அவருக்கு பின்னாலேயே சென்ற அந்த மர்ம நபர் வங்கி ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் நோக்கி, ‘சத்தம் போட்டால் சுட்டுவிடுவேன்’ என்று ஆங்கிலத்தில் கத்தினார். இதனால் வாடிக்கையாளர்களும், வங்கி ஊழியர்களும் பயந்து நடுங்கினார்கள்.

    வங்கி மேலாளர், கேஷியரின் அறைக்கு சென்று அந்த பை நிறைய பணக்கட்டுகளை அள்ளிப் போட்டார். பை நிரம்பியதும் அதை கொள்ளையனிடம் கொடுத்தார். பையை வாங்கிக்கொண்ட கொள்ளையன் மீண்டும் எச்சரிக்கை விடுத்தான். ‘அடுத்த ½ மணி நேரம் போலீசுக்கு யாரும் தகவல் கொடுக்கக் கூடாது, சத்தமும் போடக் கூடாது’ என்று கூறிய கொள்ளையன், பணப்பையுடன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் வெளியே வந்தான். தனது மோட்டார் சைக்கிளில் ஏறி, இந்திராநகர் 9-வது அவென்யூ வழியாக தப்பிச் சென்றான்.

    வங்கியில் நின்று கொண்டிருந்த சென்னை பெரியமேட்டை சேர்ந்த மோகன்ராஜ் என்ற வாடிக்கையாளர், தனது மோட்டார் சைக்கிளில் ஏறி, கொள்ளையனை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றார். இந்திராநகர் தண்ணீர்தொட்டி போக்குவரத்து சிக்னலில் கொள்ளையன் தனது மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தான். விரட்டிச் சென்ற வாடிக்கையாளர் மோகன்ராஜ், அவனை பிடிக்க முயற்சித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவன், துப்பாக்கியால் மோகன்ராஜை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டான். ஆனால் நல்லவேளையாக குறி தவறிவிட்டது. மோகன்ராஜ் மீது குண்டு பாயவில்லை. சிக்னலில் காத்திருந்த இதர வாகன ஓட்டிகள் மீதும் துப்பாக்கி குண்டு படவில்லை.

    இதற்குள் சிக்னல் விழுந்துவிட்டதாலும், பரபரப்பு ஏற்பட்டதாலும் கொள்ளையன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்ல முயன்றான். அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனத்தின் மீது மோதியதால் கீழே விழுந்தான். இதனால் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, பணப்பையுடன் அங்கிருந்து தப்பி ஓடினான்.


    கொள்ளையனை பிடிப்பதற்கு உதவியாக இருந்த மோகன்ராஜ், ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு தென்சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் சுதாகர் ரொக்கப்பரிசு வழங்கிய காட்சி.

    மோகன்ராஜ் ‘கொள்ளையனை பிடியுங்கள்... பிடியுங்கள்’ என்று கூச்சலிட்டார். உடனே சிக்னலில் நின்றிருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப், சப்-இன்ஸ்பெக்டர் ஷெரீப், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு சந்திரகுமார் ஆகியோரும், பொதுமக்களும் கொள்ளையனை சிறிது தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். ஜெயச்சந்திரன் என்ற மாணவரும் கொள்ளையனை பிடிக்க உதவியாக இருந்தார்.

    பிடிபட்ட கொள்ளையனை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையனை பத்திரமாக மீட்ட போலீசார் அவனை ஜீப்பில் ஏற்றிச் சென்று அடையாறு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அந்த கொள்ளையனிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகளும், வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ரொக்கப்பணமும் போலீசாரால் மீட்கப்பட்டது. ரொக்கப்பணத்தை போலீசார் எண்ணிப்பார்த்த போது, அதில் ரூ.6 லட்சத்து 36 ஆயிரத்து 300 இருந்தது.

    மேலும் அவனிடம் இருந்து 2 செல்போன்கள், 2 சிம் கார்டுகள், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினார்கள். கைப்பற்றப்பட்ட 2 துப்பாக்கி களும் நாட்டுத் துப்பாக்கிகள் ஆகும்.  பணத்தை கொள்ளையடித்த பீகார் மாநிலத்தை சேர்ந்த மனீஷ்குமாரை போலீசாரும், பொதுமக்களும் மடக்கிப்பிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையன் மனீஷ்குமார் கேளம்பாக்கத்தில் வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கேளம்பாக்கம் சென்று மனீஷ்குமார் தங்கி இருந்த அறையில் சோதனை போட்டு, அங்கிருந்த ஒரு பையை கைப்பற்றினார்கள். மேலும் அந்த அறையில் தங்கி இருந்த ஒரு நபரையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    கொள்ளையன் மனீஷ்குமார் வங்கிக்குள் இருந்தபோது ‘புளூடூத்’ மூலம் வேறு யாரிடமோ பேசி இருக்கிறான். எனவே அவனது கூட்டாளிகள் யாராவது வெளியே நின்றபடி கண்காணித்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    கொள்ளையன் மனீஷ் குமார் மீது வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா? அவனது கூட்டாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த கொள்ளை சம்பவத்தால் அடையாறு இந்திராநகர் பகுதி நேற்று பிற்பகலில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    கடந்த 2012-ம் ஆண்டு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் சென்னையில் வங்கிகளில் புகுந்து துப்பாக்கி முனையில் சினிமா பாணியில் கொள்ளையடித்தனர். இதில் 5 கொள்ளையர் களை ‘என்கவுண்ட்டர்’ முறையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்கள்.

    அந்த சம்பவத்துக்கு பிறகு பீகார் போன்ற வடமாநில கொள்ளையர்களின் அட்டூழியம் ஓரளவு தலையெடுக்காமல் இருந்தது. தற்போது மீண்டும் வடமாநில கொள்ளையர்களின் அட்டூழியம் அரங்கேற தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×