search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அர்த்த ராத்திரியில் குடை - எடப்பாடியை சாமியாக சித்தரிக்கும் விளம்பரம் குறித்து தினகரன் கிண்டல்
    X

    அர்த்த ராத்திரியில் குடை - எடப்பாடியை சாமியாக சித்தரிக்கும் விளம்பரம் குறித்து தினகரன் கிண்டல்

    எடப்பாடி பழனிசாமியை சாமியாக சித்தரிக்கும் தியேட்டர் விளம்பரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டி.டி.வி தினகரன், அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது போல என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என கூறியுள்ளார்.
    சென்னை:

    எடப்பாடி பழனிசாமியை சாமியாக சித்தரிக்கும் தியேட்டர் விளம்பரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டி.டி.வி தினகரன், அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது போல என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என கூறியுள்ளார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கே:- தற்போது திரையரங்குகளில் திரையிடப்படும் அரசு விளம்பரங்களில் எடப்பாடியை சாமியாக சித்தரிப்பது பற்றி....

    ப:- அதிகாரம் இருப்பதால் அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அர்த்த ராத்தியில் குடை பிடிப்பது போன்று தான். என்னவேண்டுமென்றாலும் செய்வார்கள்.

    கே:- சிலீப்பர் செல் பற்றி முன்னரெல்லாம் அதிகமாக பேசுவீர்கள், இப்போது அது பற்றியெல்லாம் பேசுவது கிடையாதே?

    ப:- நான் எப்போதுமே அதுபற்றி அதிகமாக பேசியது கிடையாது. நீங்கள் தான் கேட்டு கொண்டே இருப்பீர்கள். அதற்கு திரும்ப நான் சொல்லிக் கொண்டிருப்பேன். வாக்கெடுப்பு அன்று அவர்கள் யார் என்பது உங்களுக்கெல்லாம் தெரிய வரும்.

    கே:- சமீப காலமாக அரசியல் தலைவர்கள் அநாகரீகமாக பேசுவது அதிகரித்து வருகிறதே?

    ப:- அதுபோல பேசுபவர்களின் உண்மை சொரூபம் வெளிப்படுகிறது. தரம் தாழ்ந்த மனநிலை உள்ளவர்கள் தான் இதுபோன்று பேசுவார்கள்.

    ‘‘யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு’’ என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஒரு மனிதன் வெளிப்படுத்தக் கூடிய வார்த்தைகள் அவனுடைய மனநிலையை வெளிப்படுத்தும். வக்கிரம் உள்ளவர்கள் இதுபோன்று பேசுவார்கள்.

    கே:- இதுபோன்று பேசுபவர்களின் வார்த்தைகளால் தமிழகத்தில் ஓர் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.



    ப:- ஏற்கனவே இங்கு பா.ஜ.க.வுக்கு சுத்தமாக ஆதரவு கிடையாது. இதில் கொஞ்சம் நெஞ்சம் உள்ள ஆதரவையும் குழி தோண்டி புதைப்பதற்கு வேறுயாரும் தேவையில்லை. தமிழிசை, எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோரே போதும்.

    கே:- மக்கள் போராட்டத்தை திசை திருப்ப பார்க்கிறார்களா?

    ப:- பா.ஜ.க.வின் செயல்பாடே இப்படித்தான். அவர்களால் இங்கு எதுவும் செய்யமுடியவில்லை என்பதன் விரக்தியால் தான் இதுபோன்று பேசுகிறார்கள். மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறோம். இங்குள்ள அரசாங்கம் மத்திய அரசாங்கத்திற்கு பயப்படுகிற அரசாங்கம். நாம் என்ன சொன்னாலும் கைது செய்யமாட்டார்கள் என்கிற நினைப்பில் தான் பா.ஜ.க. வினர் உள்ளனர். துண்டு பிரசுரம் கொடுத்ததற்கு எங்கள் மீது தேசதுரோக வழக்கெல்லாம் போட்டார் பழனிசாமி. இதுபோன்று பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்கிறார்கள்.

    பெண்களை அவமானப்படுத்தி பேசுவது, பிறப்பை அவமானப்படுத்தி பேசுவது, பெண் செய்தியாளர்களை தவறாக பேசிய பிறகு அதற்கு மன்னிப்பு கேட்டால் போதுமா? பேசுவதற்கு முன்பே யோசிக்க வேண்டாமா?

    நீங்கள் என்னிடம் கேள்வி கேட்பதால் நான் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு போக முடியுமா? அதனால்தான் சொல்கிறேன், இதுபோன்று பா.ஜ.க.வினர் பேசுவது அவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.

    கே:- ஆளுநரை மாற்ற வேண்டும் என்று எல்லா கட்சிகளும் தொடர்ந்து சொல்லி வருகிறார்களே?

    ப:- அதைத்தான் அன்றிலிருந்து நானும் சொல்லி வருகிறேன். ஆளுநரை மத்திய அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும். ‘‘ஆட்டுக்கு எப்படி தாடி தேவையில்லையோ, நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை’’ என்று தீர்க்கதரிசனமாக அன்று பேரறிஞர் அண்ணா கூறியிருப்பது இன்றைக்கு இங்கு பொருந்துகிறது.

    கே:- ஆளுநரும் சரியில்லை. அரசாங்கமும் சரியில்லை. இதற்கு உடனடியாக என்ன நடவடிக்கை எடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    ப:- ஆளுநரும் சரியில்லை, அரசாங்கமும் சரியில்லை. எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள். தேர்தல் வருவது தான் ஒரே முடிவு. அதனை மக்கள் சேர்ந்து செய்ய முடியாது. நீதிமன்றத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கு இருப்பதால், இங்கு வாக்கெடுப்பு நடத்த தடை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பு வந்த பிறகு வாக்கெடுப்பு நடைபெறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அப்போது நீங்கள் கேட்ட சிலீப்பர் செல்களெல்லாம் வெளியே வருவார்கள். இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற மக்கள் விரோத ஆட்சி நிச்சயம் முடிவுக்கு வரும்.

    கே:- எச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைபர் சைக்கோ என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறார். ஜெயக்குமாரின் சில வார்த்தைகள் மத்திய அரசுக்கு எதிராக இருக்கிறதே?

    ப:- அவர்களால் பேச முடியாததால், ஜெயக்குமாரை விட்டு பேச வைக்கிறார்கள். ஜெயக்குமார் என்ன மாதிரியான ஆள் என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் தெரியும். ஆள் என்று சொன்னால் எங்களை மரியாதை இல்லாமல் பேசுவதாக தங்கமணி திடீரென்று சண்டைக்கு வருவார். அதனால் அண்ணன் ஜெயக்குமார் என்ன மாதிரியான நபர் என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் தெரியும் என்று சொல்லிக் கொள்கிறேன். அவர் என்ன மாதிரியான மனிதர் என்பது வெகு விரைவில் தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×