search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழகம் புறக்கணிப்பு - சந்திரபாபு நடவடிக்கையால் பக்தர்கள் அதிர்ச்சி
    X

    திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழகம் புறக்கணிப்பு - சந்திரபாபு நடவடிக்கையால் பக்தர்கள் அதிர்ச்சி

    பாராளுமன்றத்தில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்காததால் அறங்காவலர் குழுவிலும் தமிழகத்தை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
    சென்னை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்க 1933-ம் ஆண்டு அறங்காவலர் குழு ஏற்படுத்தப்பட்டது. மாநிலங்கள் பிரிவினைக்குப் பிறகு அறங்காவலர் குழு நிர்வாகிகளை ஆந்திர மாநில அரசு நியமித்து வருகிறது.

    15 பேர் கொண்ட இந்த அறங்காவலர் குழுவில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பான்மையாக இருப்பார்கள். தமிழகம், கர்நாடகம் உள்பட தென் மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் மரபு காலம் காலமாக கடைபிடித்து வருகிறது.

    அறங்காவலர் குழு 18 பேர் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது. இதில் தமிழகத்துக்கு இருவர், தெலுங்கானாவுக்கு இருவர் என நியமிக்கப்பட்டனர். அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் 2017-ம் ஆண்டு பிப்ரவரியோடு முடிவடைந்த நிலையில் ஒரு ஆண்டாக நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் காலியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு 18 பேர் அடங்கிய புதிய அறங்காவலர் குழுவை நியமித்தார்.

    கடப்பாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சுதாகர் யாதவ் அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆந்திர நிதி மந்திரி ராமகிருஷ்ணுடுவின் நெருங்கிய உறவினர் ஆவார்.

    இந்த குழுவில் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. திருப்பதிக்கு செல்லும் பக்தர்களில் 50 சதவீதம் பேர் தமிழர்களாக உள்ள நிலையில் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படாதது தமிழக பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த முறை தமிழக பிரதிநிதியாக சேகர்ரெட்டி இடம்பெற்று இருந்தார். அவர் கைது செய்யப்பட்டதால் உறுப்பினர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது யாரும் இடம்பெறவில்லை.

    ஆனால் கர்நாடகம் சார்பில் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா நாராயண மூர்த்தியும், மராட்டியம் சார்பில் ஸ்வப்னாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பிரதிநிதித்துவம் மராட்டியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

    பாலாறு தடுப்பணை, செம்மரக்கட்டை கடத்தல் போன்றவற்றில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தமிழர்களுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருகிறார். பாராளுமன்றத்தில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்காததால் அறங்காவலர் குழுவிலும் தமிழகத்தை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×