search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்- ராமதாஸ் அறிக்கை
    X

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

    வன்கொடுமைத் தடுப்பு சட்டம் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவில் தனிமனித சுதந்திரம் எந்த வகையிலும் பறிக்கப்படக்கூடாது; அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்ற உன்னத நோக்கத்துடன், வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்து வதில் சில திருத்தங்களைச் செய்து உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை செயல் படுத்த மத்திய அரசு மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை சீராய்வு செய்ய மத்திய அரசு கோரியிருப்பது கண்டிக் கத்தக்கது.

    வன்கொடுமைத் தடுப்பு சட்டம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 20ஆம் தேதி அளித்தத் தீர்ப்பு எந்த வகையிலும் விமர்சிக்க முடியாத ஒன்றாகும். பணியிடங்களில் தவறு செய்யும் பணியாளர்களை கண்டித்தால் அவர்கள் தங்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்து பழிவாங்கும் ஆபத்து இருப்பதாகக் கூறி சில அரசு ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, வன்கொடுமைச் சட்டம் கடந்த 30 ஆண்டுகளாக அப்பாவி மக்களையும், அரசு ஊழியர்களையும் மிரட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.

    ‘‘வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப் பட்டதன் நோக்கமே சாதியக் கொடுமைகளை அழிப்பதற்காகத் தான். ஆனால், அச்சட்டம் நடை முறைப்படுத்தப்படும் விதம் சாதி வெறுப்பை ஊக்கு விக்கும் வகையிலான பொய்ப்புகார்களை பதிவு செய்வதற்காகவே தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்த சட்டம் சாதியை ஒழிப்பதற்கு பதிலாக சாதியத்தை நிலை நிறுத்திவிடும். ஒரு சட்டம் அப்பாவிகளை சுரண்டவோ, பழிவாங்கவோ பயன்படுத்தக்கூடாது’’ என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    இந்தச் சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, முதல்கட்ட விசாரணை நடத்திய பிறகே வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வழக்குத் தொடரப்பட வேண்டும். முன்பிணை பெற வாய்ப் பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இது எந்த வகையிலும் தவறில்லை. இது பட்டியலின மக்களின் உரிமையை பறிக்காது.

    உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் பட்டியலின மக்களுக்கும், பழங்குடியினருக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி இதுவரை வழங்கப்பட்டு வரும் எந்த சலுகையும், உரிமையும் பறிக்கப்படாது. ஆனால், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கட்சிகளும், தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கட்சிகளும் நடத்தியப் போராட்டத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

    அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டால், உச்சநீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக்கும் அவசரச் சட்டம் பிறப்பிக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இது தேசிய அளவில் தலித் அல்லாத 77.5சதவீத மக்களும், மாநில அளவில் தலித் அல்லாத 81சதவீத மக்களும் பழிவாங்கப்படுவதற்கு துணை போகும் செயலாகும். இதற்கு காரணமான சக்திகளை இந்த சட்டத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

    இந்த வழக்கு விசாரணையின் போது போது, வன்கொடுமை தடுப் புச்சட்டத்தின்படி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டால், அவர் முன்பிணை பெறுவதற்கு அச்சட்டத்தின் 18-வது பிரிவு தான் தடையாக இருப்பதாகவும், அது திருத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணீந்தர்சிங் வாதிட்டார்.

    ஆனால், இப்போது அதே மத்திய அரசு வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டவர்களுக்கு முன்பிணை வழங்கப்பட்டால் அவர்கள் சாட்சிகளை கலைத்து விடுவர் என்று கூறுவது சட்டத்தையும், நீதியையும் கேலிக் கூத்தாக்கும் செயல் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

    இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் முன்பிணை கோரினாலும், அவர்கள் மீதான புகாருக்கு ஆதாரங்கள் இருந்தால் முன்பிணை வழங்கப்படாது- அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர் என்பதால் இதுகுறித்த தீர்ப்பால் தலித்துகளுக்கு பாதிப்புகள் இல்லை.

    நிறைவாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்; இல்லாவிட்டால் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், எந்தத் தவறும் செய்யாத அப்பாவி தமிழர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்படுவதை ஆதரிக்கின்றனவா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

    அதேநேரத்தில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக செயல் படுத்த வேண்டும்; இவ்வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக மாற்றும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இந்த வழக்கில் உச்சநீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவையும் பினாமி ஆட்சியாளர்கள் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #tamilnews #ramadoss

    Next Story
    ×