search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து அதிகாரி-ஊழியர்கள் மீது தாக்குதல்: நெல்லையில் அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம்
    X

    போக்குவரத்து அதிகாரி-ஊழியர்கள் மீது தாக்குதல்: நெல்லையில் அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம்

    போக்குவரத்து அதிகாரி-ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் நெல்லை சந்திப்பு டவுண் பஸ்நிலையத்திலும், புதுபஸ்நிலையத்திலும் அனைத்து அரசு பஸ்களும் திடீர் என்று நிறுத்தப்பட்டது.
    நெல்லை:

    பாளை மகாராஜநகர் உழவர்சந்தை அருகே அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. நிலஉச்சவரம்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்தபோது பணம் கொடுத்து அரசு போக்குவரத்து கழகம் இந்த இடத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அதை எதிர்த்து நில உரிமையாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்தநிலையில் அந்த இடம் நிலஉரிமையாளருக்கு சொந்தம் என்று சமீபத்தில் கோர்ட்டு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.

    ஆனால் அந்த இடத்தை பணம் கட்டி வாங்கி உள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறி தினசரி சில அரசு பஸ்களை அந்த இடத்தில் நிறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அந்த இடத்துக்கு சொந்தம் கொண்டாடும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், அந்த இடத்துக்குள் அரசு பஸ்கள் செல்ல முடியாதபடி இன்று காலை தங்களது லாரிகள், ஜே.சி.பி.எந்திரங்களை வரிசையாக நிறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து அங்கு அரசு பஸ்களை நிறுத்த வந்த அதிகாரிகள், உள்ளே பஸ்கள் செல்லமுடியாதபடி மறிக்கப்பட்டு இருந்ததால் அந்த பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அந்த இடம் அருகே உள்ள ஒரு புதர்பகுதியை சரிசெய்து அதன்வழியாக அரசு பஸ்களை உள்ளே கொண்டு செல்ல முயன்றனர்.

    மேலும் அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் வெளியூருக்கு செல்லும் அரசு பஸ்களில் இருந்த பயணிகளை பஸ்நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு, நேரடியாக தங்களது பஸ்களை பிரச்சினைக்குரிய இடம் உள்ள மகாராஜநகர் உழவர்சந்தைக்கு ஓட்டி வந்தனர்.

    அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களில் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்துகழக ஊழியர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். நில உரிமையாளர்கள் தரப்பிலும் அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக உருவானது.

    அரசு போக்குவரத்து ஊழியர்களும் - தனியார் நிறுவனத்தினரும் கம்புகளாலும் கையாலும் தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் அரசு போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் மாரியப்பன் (வயது51), டிரைவர்கள் கென்னடி பாபு (42), பெருமாள் (40), டேவிட் ஆசிர்வாதம், கண்டக்டர் மனோகரன் ஆகிய 5 பேர் பலத்த காயமடைந்தனர். எதிர்தரப்பில் மகாராஜநகர் இளஞ்செழியன், வக்கீல் ராஜ்குமார், மாரிக்கண்ணன் ஆகியோரும் காயமடைந்தார்கள். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு மாநகர போலீஸ் துணைகமி‌ஷனர் சுகுணாசிங் தலைமையில் ஏராளமான போலீசார் விரைந்து வந்தனர். அங்கு மேலும் மோதல் ஏற்படாதவாறு பாதுகாப்பு போடப்பட்டது.

    இந்த பிரச்சினை காரணமாக நெல்லை சந்திப்பு டவுண் பஸ்நிலையத்திலும், புதுபஸ்நிலையத்திலும் அனைத்து அரசு பஸ்களும் திடீர் என்று நிறுத்தப்பட்டது. பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். தனியார் பஸ்களில் கூட்டம் கூட்டமாக ஏறினர். ஆனாலும் போதிய தனியார் பஸ்கள் இல்லாததால் பயணிகள் டிரைவர் -கண்டக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பஸ்களை ஓட்ட வலியுறுத்தினர். ஆனால் டிரைவர்-கண்டக்டர்கள் பஸ்களை ஓட்ட மறுத்து வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் பஸ்கிடைக்காமல் பெரிதும் பாதிப்படைந்தனர். அவர்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்து, பஸ்களை இயக்க பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் 1½ மணி நேரம் போக்குவரத்து இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.

    இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    Next Story
    ×