search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு சட்டம் இயற்ற வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
    X

    அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு சட்டம் இயற்ற வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

    முதுநிலை மருத்துவ சேர்க்கையில் அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில் 50 விழுக்காட்டை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க வகை செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவதற்கான தமிழக அரசின் ஆணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர்சேர்க்கை இந்த ஆண்டும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த பின்னடைவுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

    தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள மொத்த இடங்களில் 50சதவீத இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ளவற்றில் பாதி இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற ஊக்குவிக்கும் வகையிலும் இந்த சலுகை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறையை இந்திய மருத்துவக் குழு ரத்து செய்தது.

    அதற்கு மாற்றாக மலைப்பகுதிகள், தொலை தூரங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கலாம் என்று மருத்துவக் குழு அறிவித்திருந்தது. இந்த முறையை சிறப்பாக பயன்படுத்தியிருந்தால் பெரும்பான்மையான அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடம் பெற்றுக் கொடுத்திருக்கலாம்.

    ஆனால், தமிழக அரசோ, ஊக்க மதிப்பெண் வழங்குவதற்கான வழி முறையை ஏராளமான குறைபாடுகளுடன் தயாரித்தது. இதை எதிர்த்து சில மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்து விட்டது.

    இத்தகைய சூழலில் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடம் பெற்றுத்தர தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? என்பது தான் அரசு மருத்துவர்கள் மட்டுமின்றி, சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைவர் மனதிலும் எழுந்துள்ள வினாவாகும். இதற்கு ஒரே தீர்வு அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில் 50 விழுக்காட்டை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றி அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது தான். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பினாமி அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #Tamilnews
    Next Story
    ×