search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிகாரி சந்தானம் விசாரணை நடத்த கல்லூரிக்கு வந்தார்.
    X
    அதிகாரி சந்தானம் விசாரணை நடத்த கல்லூரிக்கு வந்தார்.

    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்- 4 மாணவிகளிடம் அதிகாரிகள் விசாரணை

    பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் அழைப்பு தொடர்பாக புகார் அளித்த 4 மாணவிகளிடம் அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டனர்.
    மதுரை:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

    இது தொடர்பாக நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    மதுரை பல்கலை கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு 4 மாணவிகளிடம் செல்போனில் பேசி வற்புறுத்தும் நிர்மலா தேவியின் பின்னணியில் பலர் உள்ளனர்.பல்கலைக் கழக அதிகாரிகள், பேராசிரியர்கள் பலருக்கு இதில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் மாணவிகளின் வாழ்க்கை பிரச்சனை பற்றியது என்பதாலும் உயர் கல்வி துறைக்கே மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தி இருப்பதாலும் கவர்னர் பன்வாரிலால் நேரடியாக இதில் தலையிட்டு விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இது தொடர்பான விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பாலியலுக்கு அழைக்கப்பட்ட 4 மாணவிகளிடமும் எந்த அடிப்படையில் பேராசிரியை நிர்மலாதேவி அதுபோன்று பேசினார். அதன் பின்னணி என்ன? என்பதை இப்போது வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டிய முக்கிய விவகாரமாக உள்ளது. இதுபற்றியே ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானமும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    அதே நேரத்தில் பாதிப்புக்குள்ளான மாணவிகள் பற்றிய எந்த வி‌ஷயங்களும் வெளியில் கசிந்துவிடக் கூடாது என்பதிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    பாலியல் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட 4 மாணவிகளும் தற்போது மிகுந்த மனஉளைச்சலில் உள்ளனர். அதில் இருந்து அவர்களை மீட்டு கொண்டு வந்தே விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    கமலி, தியாகேஸ்வரி

    இது தொடர்பாக மாணவிகளிடம் முதலில் கவுன்சிலில் மூலம் சில ஆலோசனைகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் விவகாரத்தை பொறுத்தவரையில் மாணவிகளிடம் வெளிப்படையாக பல்வேறு கேள்விகளை கேட்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்துக்கு உதவிகரமாக இருப்பதற்காக பேராசிரியைகள் கமலி, தியாகேஸ்வரி ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கமலி, அன்னைதெரசா மகளிர் பல்கலை கழகத்தில் பணிபுரிகிறார். மதுரை வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி மைய சுற்றுச்சூழல் பேராசிரியையாக தியாகேஸ்வரி பணியில் உள்ளார்.

    இவர்களின் துணையுடன் 4 மாணவிகளிடமும் விசாரணை நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில் இருந்து நேற்று மாலையே அருப்புக்கோட்டை சென்றார்.

    இன்று காலை 9.50 மணி அளவில் தேவாங்கர் கலைக்கல்லூரிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீசார் சென்றனர். அதே நேரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான பேராசிரியைகள் கமலி, தியாகேசுவரி ஆகியோர் அடங்கிய குழுவினரும் கல்லூரிக்கு சென்றனர்.

    முதலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கல்லூரியில் உள்ள ஒரு அறையில் வைத்து 4 மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர். சூப்பிரண்டு ராஜேஸ்வரியும் நேரில் விசாரணை நடத்தினார்.

    அப்போது 4 மாணவிகளும் பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக வாக்குமூலம் அளித்தனர். இவைகளை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.


    இதன் பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழுவினரும் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடமும் மாணவிகள் நிர்மலா தேவியின் பாலியல் தொல்லை குறித்து விரிவாக விளக்கி கூறினார்கள்.

    நிர்மலாதேவி செல்போனில் பேசிய பேச்சுக்கள் அடங்கிய தகவல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் ஆகியவற்றை மாணவிகள் ஒப்படைத்தனர்.

    கல்லூரி முதல்வர், பாண்டியராஜன், நிர்வாகிகள், பேராசிரியர்கள், பேராசிரியைகள், அலுவலர்கள் மற்றும் முன்னாள் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகளும், ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழுவினரும் ஒரே நேரத்தில் தேவாங்கர் கல்லூரியில் அதிரடி விசாரணை நடத்தியதால் கல்லூரி வளாகம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதன் காரணமாக கல்லூரி வளாகத்தில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். #NirmalaDevi #Tamilnews
    Next Story
    ×