search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனித சங்கிலி போராட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும்- திருநாவுக்கரசர் வேண்டுகோள்
    X

    மனித சங்கிலி போராட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும்- திருநாவுக்கரசர் வேண்டுகோள்

    காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வருகிற 23-ந்தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும் என்று திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.#thirunavukkarasar #cauveryissue

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவேரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டுமென்று அழுத்தம் கொடுத்திட மாவட்ட தலைநகரங்களில் ஏப்ரல் 23, திங்கட்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதென்று காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகள் பங்கேற்ற, தி.மு.க.வின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆறு வார காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டுமென மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் ஆணையிட்டது. ஆனால் காலக்கெடுவுக்குள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளது. மேலும் மூன்று மாத அவகாசம் கேட்டு அரசியல் ஆதாய நோக்கோடு நரேந்திர மோடி அரசு செயல்பட்டுள்ளது.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சி இருக்கும் வரை காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கமாட்டார்கள் என்கிற அவநம்பிக்கை தமிழக மக்களிடையே உருவாகியுள்ளது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக ஒத்து ஊதுகிற அரசாக அ.இ.அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    தமிழகத்தின் உரிமைகளை காவேரி பிரச்சினை, நீட் தேர்வு, மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்கள், 15 ஆவது நிதிக்குழுவின் மூலம் ஏற்படப்போகிற பாதிப்புகள் என எதுவாக இருந்தாலும் இவற்றையெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுக்கிற துணிவற்ற அரசாக எடப்பாடி அரசு விளங்கி வருகிறது.


    எனவே, ஏப்ரல் 23 மாலை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காவேரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிற மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் நடைபெறுகிற மனித சங்கிலி போராட்டத்தின் மூலம் ஏறத்தாழ எட்டு கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மத்திய அரசுக்கு வெளிப்படுத்துகிற வகையில் அனைத்து கட்சியினர், பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரின் கைகளும் இணைய வேண்டும்.

    இணைந்த கைகள் மனித சங்கிலியாக தொடர வேண்டும். இதன்மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பை நரேந்திர மோடி அரசுக்கு தெரிவிப்பதோடு, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓய மாட்டோம் என்பதை உரத்தக் குரலில் கூறுவோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews #thirunavukkarasar #cauveryissue

    Next Story
    ×