search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் உடனே பதவி விலக வேண்டும்- வைகோ அறிக்கை
    X

    கவர்னர் உடனே பதவி விலக வேண்டும்- வைகோ அறிக்கை

    தமிழக கவர்னர் பதவியில் நீடிப்பது அவமானம் என்றும், உடனே பதவி விலக வேண்டும் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #vaiko #tngovernor

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ‘தமிழ்நாடு அரசின் மற்றொரு தலைமைச் செயலகமாக ராஜ்பவன் செயல்படுகின்றது’ என்று ஏற்கனவே நான் சுட்டிக்காட்டி இருக்கின்றேன்.

    தமிழக அரசுப் பணிகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்தல், அரசு உயர் அதிகாரிகளுக்கு நேரடி உத்தரவு போடுதல், தொழில் தொடங்குவற்கு ராஜ்பவனை நாடுங்கள் ; நான் ஏற்பாடு செய்வேன் என்று அறிவித்தல் போன்றவை, ஆளுநர் புரோகித்தின் வரம்பு மீறிய செயல்கள் ஆகும்.

    வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை, அதிலும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டோரைத் தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக நியமித்து வருகின்றார்.

    மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசின் முதல்வரைவிட தாம் ஒரு ‘சூப்பர் முதல்வர்’ என்பது போன்று ஆளுநர் புரோகித் தம்மைக் காட்டிக்கொண்டு வருவது கடுமையான கண்டனத்திற்கு உரியது.

    தற்போது அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற உரையாடல் அம்பலம் ஆகி, சந்தனம் மணக்க வேண்டிய கல்வித்துறை, சாக்கடையாக மாறி விட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கின்றது.

    ஏற்கனவே தஞ்சையில் நடந்த ஒரு விழாவில் ஆளுநர் பங்கேற்றபோதும் இதுபோன்று நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தை, ஒரு நபர் விசாரணை ஆணையமாக ஆளுநர் நியமித்தது சட்டமீறல்; அதற்கான அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது.

    அவரே புகார் வளையத்திற்குள் சிக்கி இருக்கும்போது, அவர் நியமித்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தால் எந்த உண்மையும் வெளிவராது. உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கவே இந்த ஏற்பாடு.

    எனவே, இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும்; நேர்மையான விசாரணை நடத்தி, யாருக்காக அவர் இவ்வாறு செயல் பட்டார் என்ற உண்மையை வெளிக் கொணர வேண்டும்; அந்த நபர்களைக் கைது செய்து குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும்.


    மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசாங்கத்தை மதிக்காமலும், தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்ற, பல்வேறு புகார்களுக்கு ஆளாகி இருக்கின்ற பன்வாரிலால் புரோகித், தமிழக ஆளுநர் பொறுப்பில் நீடிப்பது மானக்கேடு. அவர் உடனே பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews #vaiko #tngovernor

    Next Story
    ×