search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தூர் அருகே சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு தொழிற்சாலைக்கு சீல் வைப்பு
    X

    சாத்தூர் அருகே சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு தொழிற்சாலைக்கு சீல் வைப்பு

    சாத்தூர் அருகே சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு தொழிற்சாலைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் சமீப காலமாக விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன.

    எனவே மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலைகளில் விதிமுறை மீறல்களை கண்காணிக்கும் வகையில் 9 துணை ஆட்சியர்களும், 15 வட்டாட்சியர்களும் ஆய்வு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனப்படையில், சாத்தூர் வட்டாட்சியர் சாந்தி பட்டாசுத் தொழிற்சாலைகளை திடீர் ஆய்வு செய்தார். அப்போது சாத்தூர் வட்டம் கரிசல்பட்டி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கி வந்த சூரியன் பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் ரகுநாதன் என்பவர் வெம்பக்கோட்டை வட்டம் தாயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரின் மகன் ஜெயக்குமார் என்பவருக்கு சட்ட விரோதமாக குத்தகைக்கு விடப்பட்டு பட்டாசு உற்பத்தி செய்துவந்துள்ளதும், அனுமதி பெறாமல் பேன்சி ரக பட்டாசுகளும் தயார் செய்யப்பட்டு வந்தது தெரிந்தது.

    மேலும் அனுமதிக்கப்படாத இடங்களான கெமிக்கல் அறை, ரசாயனப் பொருட்கள் நிரப்பும் அறை, திரிவெட்டும் அறை ஆகிய அறைகளில் தொழிலாளர்களை பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபடுத்தியதும் ஆய்வின் போது கண்டறியப்பட்டது.

    விதிமுறைகளை மீறி கந்தக அறையில் 5 கிலோ எடையுள்ள கந்தகம் மற்றும் அலுமினிய பவுடர் கலந்த கலவை தரையில் குவித்து வைக்கப்பட்டிருந்ததையும், சுமார் 50 கிலோ எடையுள்ள மணி மருந்துகள் வெட்டவெளியில் உலர வைக்கப்பட்டிருந்ததையும் கண்டறிப்பட்டு பாதுகாப்பு கருதி உடனடியாக தண்ணீர் ஊற்றி அழிக்கப்பட்டது.

    இவ்வாறு சட்ட விரோதமாக குத்தகை அடிப்படையில் பட்டாசுகள் உற்பத்தி செய்து வந்த குத்தகைதாரர் ஜெயக்குமார், உரிமையாளர் ரகுநாதன் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், இந்த பட்டாசுத் தொழிற்சாலையில் பட்டாசு உற்பத்தி செய்வதற்கு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு, வருவாய்த்துறையினால் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது.

    இதுபோல் முறையின்றி செயல்படும் மற்ற தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.
    Next Story
    ×