search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடை விடுமுறை - ஆம்னி பஸ்களில் அதிக கட்டண வசூல்வேட்டை தொடருகிறது
    X

    கோடை விடுமுறை - ஆம்னி பஸ்களில் அதிக கட்டண வசூல்வேட்டை தொடருகிறது

    கோடை விடுமுறையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க ஆம்னி உரிமையாளர்கள் தொடங்கிவிட்டனர்.
    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு முடிந்து விட்டது. பிற மாணவர்களுக்கும் நாளையுடன் தேர்வு முடிந்துவிடுவதால் கோடை விடுமுறையை கொண்டாட மாணவ-மாணவிகள் தயாராகி விட்டனர்.

    சொந்த ஊர்களுக்கும், கோடை வாசஸ்தலங்களுக்கும் செல்ல பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். கோடையில் அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்ட நிலையில் அரசு பஸ்களை மக்கள் நாடி வருகின்றார்கள்.

    நீண்டதூரம் செல்லக் கூடிய விரைவு பஸ்களில் முன்பதிவு தொடங்கி நடைபெற்றாலும் புதிய பஸ்கள் விடப்படாததால் அரசு பஸ்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை.

    இருக்கைகள் மோசமான நிலையில் இயக்கப்படும் விரைவு பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்வதைவிட அதைவிட கூடுதலாக கட்டணம் கொடுத்து சொகுசாக பயணம் செய்யலாம் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    ஆம்னி பஸ்களில் பல்வேறு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. பண்டிகை காலத்தை போல கோடை விடுமுறை காலத்திலும் அதிக கட்டணம் வசூலில் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் களம் இறங்கிவிட்டனர்.

    1200க்கும் மேலான ஆம்னி பஸ்கள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றின் கட்டணம் ஆன்லைனில் நிமிடத்துக்கு நிமிடம் மாற்றி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் எப்போதும் ஆம்னி பஸ்களுக்கு கடும் கிராக்கி ஏற்படுவது உண்டு.

    ஆனால் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டதால் பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கூடியுள்ளது. இத்தருணத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் இஷ்டத்திற்கு கட்டணம் வசூலித்து வருகிறார்கள். ஏ.சி. இருக்கை, ஏ.சி. படுக்கை, சாதாரண இருக்கை, சாதாரண படுக்கை என பல்வேறு வகைகளாக வசதிகளை தரம் பிரித்து பயணிகளிடம் கட்டணத்தை பல மடங்கு அதிகமாக வசூலிக்கிறார்கள்.

    வழக்கமாக சென்னையில் இருந்து திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடிக்கு ஏசி வசதி இல்லாத ‘புஷ்பேக்’ இருக்கை வசதிக்கு ரூ.600, ரூ.700 கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது ரூ.900, ரூ.1000 வரை நிர்ணயிக்கிறார்கள். ஏசி வசதி உள்ள பஸ் ஆக இருந்தால் ரூ.1200 முதல் ரூ.1400 என வசூலிக்கப்படுகிறது.

    அரசு போக்குவரத்து கழகங்களில் பராமரிப்பு இல்லாமலும் மோசமான நிலையில் பஸ்கள் இருப்பதால் மக்கள் தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

    ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு இந்த 45 நாட்களும் கோடைவசூல் மழை என்றே கூறலாம். தமிழகத்துக்குள் அனைத்து பகுதிகளுக்கும் ஆம்னி பஸ்கள் சென்று வருவதால் ரெயிலில் இடம் கிடைக்காதவர்கள் கட்டணம் கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு ஆம்னி பஸ்கள் பக்கம் செல்கிறார்கள்.

    ஆனால் சாதாரண மக்கள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய முடியவில்லை. அரசு பஸ் மற்றும் ரெயில் பயணத்தை தான் நம்பி இருக்கிறார்கள். மே மாதம் புதிதாக அரசு பஸ்கள் விடப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அதிகாரிகளும் உற்சாகம் இழந்து கோடை விடுமுறையை எப்படி சமாளிக்க போகிறோம். வருவாய் ஈட்டப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
    Next Story
    ×