search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியை விவகாரம்: 2 கட்டமாக விசாரணை நடைபெறும்- அதிகாரி சந்தானம் பேட்டி
    X

    பேராசிரியை விவகாரம்: 2 கட்டமாக விசாரணை நடைபெறும்- அதிகாரி சந்தானம் பேட்டி

    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக 2 கட்டமாக விசாரணை நடைபெறும் என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார். #NirmalaDevi
    மதுரை:

    அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியலுக்கு அழைத்த விவகாரம் தமிழக உயர்கல்வி வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அருப்புக்கோட்டையில் முகாமிட்டு விசாரணையை தொடங்கி உள்ள நிலையில் கவர்னர் நியமனம் செய்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானமும் இன்று தனது முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளார்.

    இதற்காக காலை 10.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான புகார்கள் குறித்து இன்று அரசு சுற்றுலா மாளிகை மற்றும் பல்கலைக்கழகம் சென்று அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை சந்தித்து விசாரணை நடத்த உள்ளேன். பின்னர் இன்று மாலை அருப்புக்கோட்டை செல்கிறேன். நாளை (வெள்ளிக்கிழமை) அங்கு சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.


    சி.பி.சி.ஐ.டி. போலீசார் புகாரின் முகாந்திரம் குறித்து கிரிமினல் விசாரணை நடத்துவர். நான் நிர்மலா தேவி மீதான புகார் குறித்தும், பல்கலைக்கழக அதிகாரிகளின் தொடர்பு மற்றும் ஒழுங்கீனம் குறித்தும் விசாரணை நடத்த உள்ளேன். இதனால் இதில் எந்த முரண்பாடும் ஏற்படாது.

    முதல் கட்டமாக வருகிற சனிக்கிழமை வரை 3 நாட்கள் மதுரையில் விசாரணை நடத்தப்படும். பின்னர் அடுத்த வாரம் மீண்டும் மதுரை வந்து 2-ம் கட்ட விசாரணை நடத்தப்படும்.

    இவ்வாறு விசாரணை அதிகாரி சந்தானம் கூறினார்.

    இதையடுத்து மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்த சந்தானம், அங்கு போசிரியை நிர்மலா தேவி தொடர்பான ஆடியோ பதிவை கேட்டு ஆய்வு செய்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சிலரையும் அழைத்து விசாரணை நடத்தினார்.

    இன்று மாலை அருப்புக்கோட்டை செல்லும் சந்தானம் புகாரில் சிக்கியுள்ள தனியார் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிடட்டுள்ளார். #NirmalaDevi
    Next Story
    ×