search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதியில்லாததால் இறந்தவர்களின் உடலை ஆற்றுக்குள் எடுத்து செல்லும் அவலம்
    X

    சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதியில்லாததால் இறந்தவர்களின் உடலை ஆற்றுக்குள் எடுத்து செல்லும் அவலம்

    நாகை அருகே சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதியில்லாததால் இறந்தவர்களின் உடலை ஆற்றுக்குள் எடுத்து செல்லும் அவலநிலை நிலவுகிறது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில் காந்தி மகான்தெரு, சிவன்கோவில் தெரு, உழவன்தெரு, சுனாமி குடியிருப்பு, சங்கிளிபுரம் ஆகிய 5 பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்று அந்த பகுதியில் தனியாக சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சுடுகாடு, பரவை ஆற்றின் மறுகரையில் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த யாரேனும் இறந்து போனால் இந்த ஆற்றை கடந்து தான் சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் ½ கிலோமீட்டர் தூரம் உள்ள பரவை ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் கடந்து சென்று தான் இறந்தவர்களை அடக்கம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த காந்திமதி என்பவர் உயிரிழந்தார். அதைதொடர்ந்து அவரது இறுதி சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது அந்த பகுதி மக்கள் காந்திமதியின் உடலை, பரவை ஆற்றின் தண்ணீரில் இறங்கி சென்று தான் அடக்கம் செய்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதிக்கான சுடுகாடு ஆற்றின் மறுகரையில் தான் உள்ளது. சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனால் எங்கள் பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களின் உடலை ஆற்றுக்குள் இறங்கி எடுத்து செல்லும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து பல முறை மனு அளித்துள்ளோம். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    Next Story
    ×