search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திறந்த வேனில் நின்றபடி பேசிய போது எடுத்த படம்.
    X
    கோவில்பட்டியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திறந்த வேனில் நின்றபடி பேசிய போது எடுத்த படம்.

    ம.தி.மு.க. விதைத்த விதை மரமாகி வளர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது- வைகோ

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என கூறினோம். அன்று நாங்கள் விதைத்தது இன்று மரமாக வளர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வைகோ கூறினார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் ம.தி.மு.க. சார்பில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு பிரசார பயணம் தொடங்கியது. இதில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நியூட்ரினோ, நீட், காவிரி பிரச்சனை, ஹைட்ரோ கார்பன், மீனவர் பிரச்சனை என அனைத்திலும் பிரதமர் மோடி துரோகம் செய்துள்ளார். தமிழகத்துக்கு வந்தபோது கருப்பு கொடியை பார்க்க கூடாது என வானத்திலேயே பறந்தார்.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 1996-ம் ஆண்டு மார்ச் 5-ல் ம.தி.மு.க. சார்பில் எனது தலைமையில் தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தொடர்ந்து 12-ம் தேதி கருப்பு கொடி, டிசம்பரில் ஆலை முற்றுகை போராட்டம் நடத்தி கைதானோம். அமெரிக்காவில் அசார்பூ என்ற நச்சு ஆலைக்கு எதிராக, மக்கள் பல வருடங்கள் போராடி நீதிமன்ற உத்தரவின்பேரில் மூடப்பட்டது. ஆனால், 50 வருடங்களாகியும் அங்குள்ள நிலங்களை சீர்திருத்தம் செய்ய முடியவில்லை. விவசாயமும் செய்ய முடியவில்லை. இதையெல்லாம் எடுத்து கூறி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கிராமம் கிராமமாக 1997-ல் நடைபயணம் மேற்கொண்டேன்.

    1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி நாங்கள் போராட்டம் நடத்தினோம். அப்போது ஆலையில் 2 தொழிலாளர்கள் இறந்துவிட்டனர். அதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் விடுதலை புலிகளை அனுப்பி வைகோ சதி செய்துவிட்டார் என அறிக்கை வெளியிட்டது. அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜாங்கிட் விசாரித்து இதில் விடுதலை புலிகள் தொடர்பில்லை. வைகோ சதி செய்யவில்லை என கூறினார்.

    இனி இப்படிப்பட்ட பழிகள் வரக்கூடாது என்று நீதிமன்றத்துக்கு சென்றேன். இதில் என்னுடைய சுயநலன் எதுவும் கிடையாது. பொது மக்களுக்காகவும், மீனவர்களுக்காகவும் தான் வாதாடினேன்.


    ஒவ்வொரு தேர்தலின் போது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என கூறினோம். அன்று நாங்கள் விதைத்தோம், இன்று மரமாக வளர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுமக்கள், வணிகர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், மீனவர்கள் போராட்ட களத்துக்கு வந்துள்ளனர்.

    22 ஆண்டுகளாக எதற்காக நான் போராடினேனோ அது தற்போது நிறைவேறி இருக்கிறது. வருகிற 28-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தது அ.தி.மு.க. அரசு. இன்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்து விட்டது என்பது ஒரு ஏமாற்று வேலை. இது ஒரு மாதத்துக்கு மக்களை சமாளிக்க தான் இந்த அறிவிப்பு. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் ஓயாது ஆலையை நிரந்தரமாக கண்டிப்பாக மூடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவருடன் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ், மாவட்ட துணை செயலாளர் பவுன்மாரியப்பன், ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் பொன்ராம், முத்துசெல்வம், ராஜசேகர், வனராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கோவில்பட்டியில் பிரசாரத்தை தொடங்கிய வைகோ எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம் , சூரங்குடி, வைப்பார், குளத்தூர் ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இன்று மாலை 4 மணிக்கு வைகோ கோவில்பட்டி அடுத்த கரிசல்குளத்தில் பிரசாரத்தை தொடங்கி காமநாயக்கன்பட்டி, பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், குறுக்குசாலை உள்ளிட்ட இடங்களில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். #BanSterlite #TalkAboutSterlite
    Next Story
    ×