search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ்-2 மாணவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
    X

    பிளஸ்-2 மாணவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

    சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டியில் காதலிக்க மறுத்ததால் பிளஸ்-2 மாணவியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
    சேலம்:

    சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி, ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 24).

    இவர், வீரபாண்டி, காலனி தெருவை சேர்ந்த ரவி என்பவருடைய மகள் தாரணியை(17) ஒரு தலைபட்சமாக காதலித்தார். தாரணி 9-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது அவரது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் லோகநாதன் உங்களது மகளை எனக்கு திருமணம் செய்து தருமாறு கூறி பெண் கேட்டார்.

    இதற்கு மாணவியின் பெற்றோர் எங்களது மகள் தற்போது தான் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். மேலும் பிளஸ்-2 படித்து முடித்த பிறகு கல்லூரி படிப்பு படிக்க வைக்க உள்ளோம். அதனால் இப்போதைக்கு திருமணம் பற்றிய பேச்சுகே இடம் இல்லை. எனவே உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாது என கூறினர்.

    இதனால் லோகநாதன் கடும் ஆத்திரம் அடைந்தார்.தொடர்ந்து மாணவியை டார்ச்சர் செய்து வந்தார். அவரது தொந்தரவை தாங்கி கொண்டு தினமும் தாரணி பள்ளிக்கு சென்று வந்தார்.

    பிளஸ்-2 படித்து கொண்டிருந்த போது தாரணி கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந்தேதி பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    கலைஞர் காலனி தெற்கு ரோடு பகுதியில் வந்தபோது அவரை வழிமறித்து லோகநாதன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார். உனது காதலை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் மேலும் படிக்க வேண்டும். என்னை, நீ தொந்தரவு செய்யாதே என கூறினார்.

    இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற லோகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாரணியின் வயிறு மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பு வழங்கினார். லோகநாதனுக்கு நீதிபதி ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    இதையடுத்து போலீசார் லோகநாதனை பாதுகாப்பாக அழைத்து சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×