search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் வரி வருவாய் 17 சதவீதம் வளர்ச்சி - அரசு ஊழியர் கூட்டமைப்பு தகவல்
    X

    புதுவையில் வரி வருவாய் 17 சதவீதம் வளர்ச்சி - அரசு ஊழியர் கூட்டமைப்பு தகவல்

    புதுவை அரசின் வரி வருவாயின் வளர்ச்சி 17 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுசெயலாளர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுசெயலாளர் லட்சுமணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை முதல்-அமைச்சர் 2017-18-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் 95 சதவீதம் செலவு செய்து இருக்கிறோம் என்று கூறுவது நிதி நிலைமை சீரடைந்துள்ளது என்பதை காட்டுகிறது. மேலும் புதுவை அரசின் சிக்கன நடவடிக்கையால் இந்த ஆண்டு ரூ.180 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்கதாகும்.

    கடந்த 2013-14-ம் ஆண்டில் வரி வருவாயின் வளர்ச்சி பூஜ்ஜியமாக இருந்தது. தற்போது 2017-18-ம் ஆண்டில் புதுவை அரசின் வரி வருவாயின் வளர்ச்சி, அனைத்து மாநிலங்களின் வரி வருவாய் வளர்ச்சிக்கு இணையாக 16.7 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்

    யூனியன் பிரதேச மாநாட்டில் கவர்னர் புதுவை அரசின் நிதி நிலைமை சீரடைந்துள்ளது என பதிவு செய்துள்ளார். இதற்கு காரணமாக புதுவை கவர்னர், முதல்வர், தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறை செயலர் ஆகியோரை பாராட்டுகிறோம்.

    மாநிலங்களுக்கான சரக்கு போக்குவரத்து பரிவர்த்தனையை மின்னனு மூலம் நடைமுறைப்படுத்துவதால், வரிவருவாய் 2018-19-ல் 20 சதவீதமாக உயரும். மேலும் வருங்காலங்களில் நிதி பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்த்திட அரசு விதிகள்-ஆணைகளுக்கு உட்பட்டு அதிகாரிகள் செயல்பட்டால், ஒவ்வொரு ஆண்டும் வீணாகும் சுமார் ரூ.500 கோடியை தந்து பொதுமக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிட முடியும்.

    மேலும் புதுவை தனிக் கணக்கை திரும்பப் பெறும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசை வற்புறுத்தினால், மத்திய அரசு வழங்கும் 30 சதவீதம் நிதி 70 சதவீதமாக உள்ளது.

    மத்திய அரசு வழங்கிய நிலக்கரியை திரும்பப் பெற்றால், ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரியில்லா வருவாயாக கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை மத்திய அரசே வழங்கிட நடவடிக்கை எடுத்தால் ரூ.650 கோடி மீதமாகும்.

    இவற்றை முதல்- அமைச்சர் நாராயணசாமி உறுதியாக செயல்படுத்தினால், வரும் காலங்களில் பொதுமக்களின் நலத்திட்டங்கள், ஓய்வூதியம், நிலுவைத் தொகை, தினக்கூலி ஊழியர்களை காலிப்பணியிடங்களில் பணி நிரந்தரம் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற முடியும்.

    இவ்வாறு லட்சுமணசாமி கூறினார்.
    Next Story
    ×