search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி விவகாரம் - சுடுகாட்டில் எரியும் பிணம் அருகே படுத்து விவசாயிகள் நூதன போராட்டம்
    X

    காவிரி விவகாரம் - சுடுகாட்டில் எரியும் பிணம் அருகே படுத்து விவசாயிகள் நூதன போராட்டம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் எரியும் பிணத்திற்கு அருகே அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் படுத்து போராட்டம் நடத்தினார்கள். #CauveryManagementBoard #Cauveryissue

    திருச்சி:

    தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. திருச்சியில் இப்போராட்டம் வலுத்துள்ளது.

    திருச்சி காவிரி ஆற்றுக்குள் ஏர் மாடுகளுடன் நுழைந்து உழுது போராட்டம் நடந்ததுடன், நள்ளிரவில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் திடீரென மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர்.

    இந்த பரபரப்பான நிலையில் இன்று காலை திடீரென தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி காவிரி ஆற்று அருகில் உள்ள ஓயாமாரி சுடுகாட்டிற்குள் நுழைந்தனர்.

    எப்போதும் இந்த சுடுகாட்டில் பிணங்கள் எரிந்து கொண்டிருப்பதால் ஓயாமரி என்று பெயர் பெற்ற இந்த சுடுகாட்டில் இன்று காலையும் இறந்த ஒருவரின் உடல் எரியூட்டப்பட்டு கொண்டிருந்தது.

    கரும் புகையுடன் எரிந்து கொண்டிருந்த பிணத்தின் அருகில் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் கழுத்தில் மாலை, எலும்பு, மண்டை ஒடுகளுடன் பிணம் போல் படுத்தனர்.

     


    மத்திய அரசு இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி, கண்டுகொள்ளாமல் இருந்து வருவதால் தமிழகத்தில் அனைத்து விவசாயிகள் நிலையும் உயிர் அற்றவர்கள் போன்று ஆகிவிட்டதை உணர்த்தவே எரியும் பிணத்துடன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக திருச்சி கோட்டை போலீசார் அங்கு வந்தனர். பிணத்துடன் படுத்திருந்த விவசாயிகளை சுடுகாட்டை விட்டு வெளியேறும் படி கேட்டனர். ஆனால் விவசாயிகள் எழுந்து வரவில்லை.

    இதனால் போலீசாருக்கும் அய்யாக்கண்ணுவுக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது. அதன் பிறகு போலீசார் விவசாயிகளை சுடுகாட்டில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். அப்போது விவசாயிகள் மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து சுடுகாட்டில் பிணம் அருகே படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 13 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  #CauveryManagementBoard #Cauveryissue

    Next Story
    ×