search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் கோடை மழை நீடிப்பு
    X

    குமரி மாவட்டத்தில் கோடை மழை நீடிப்பு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது,
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரித்த கோடை வெயில் கடந்த சில நாட்களாக தணிந்து விட்டது. குமரி கிழக்கு மாவட்டத்தில் கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், தென்தாமரைகுளம் பகுதிகளில் பெய்துவந்த மழை சில நாட்களுக்கு முன்பிருந்து மாவட்டம் முழுவதும் பெய்யத் தொடங்கியது. இதனால் மாவட்டத்தில் நிலவிய உஷ்ணம் தணிந்தது. வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களும் தப்பித்தனர்.

    கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை பெய்த மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. நேற்று காலையிலும் நாகர்கோவில் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அதன் பிறகு வெயில் அடித்தாலும் உஷ்ணம் தாக்கவில்லை.

    இன்று காலையிலும் குமரி மேற்கு மாவட்டம் மற்றும் மலைகிராமங்களில் சாரல் மழை பெய்தது. நாகர்கோவில், தோவாளை, அஞ்சுகிராமம் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு வினாடிக்கு 137 கன அடி தண்ணீர் வரத்தொடங்கியது.

    பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. அதன் பிறகும் அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினத்தை காட்டிலும் ஒரு அடி உயர்ந்து விட்டது. இன்று காலையில் அணையின் நீர் மட்டம் 2 அடியாக இருந்தது. இதனையும் வெளியேற்ற அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.

    பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 57.70 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் வருகிறது. சிற்றாறு1 அணையின் நீர் மட்டம் 10.27 அடியாகவும், சிற்றாறு2 அணையின் நீர் மட்டம் 10.37 அடியாகவும் உள்ளது.

    இது போல மாம்பழத் துறையாறு அணையின் நீர் மட்டம் 51.67 அடியாகவும், பொய்கை அணையின் நீர் மட்டம் 16 அடியாகவும் உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 25 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    Next Story
    ×