search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வந்தவாசியில் இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் இருதரப்பினர் மோதல்
    X

    வந்தவாசியில் இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் இருதரப்பினர் மோதல்

    வந்தவாசியில் இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் இருதரப்பினர் மோதல்; போலீஸ் மீது தாக்குதல் டீக்கடை சூறை-தடியடி

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே இருத்தரப்பினர் கல்வீசி தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர். போலீசார் தடியடி நடத்தி வன்முறையை கட்டுப்படுத்தினர்.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள தெள்ளார் கிராமத்தில் இரு பிரிவினர் அடிக்கடி மோதிக் கொள்கின்றனர். சிறு சிறு பிரச்சினை என்றாலும், அந்த பகுதி போர்களம் போல் மாறிவிடுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை தெள்ளார் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஒரு பிரிவை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண், செய்யாறு ரோட்டில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார்.

    அப்போது, அங்கு வந்த மற்றொரு பிரிவை சேர்ந்த ஒரு வாலிபர் இளம்பெண்ணை வழி மறித்து கேலி, கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து, அப்பெண் பெற்றோரிடம் கூறினார். பெற்றோர், தனது உறவினர்கள் 50 பேருடன் தெள்ளார் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

    போலீசார், சம்பந்தப்பட்ட அந்த வாலிபரை விசாரிக்க போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இதையறிந்த அந்த வாலிபரின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    வாலிபரை விடுவிக்கக் கோரி, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அங்கிருந்த இளம்பெண் தரப்பினருடனும் எதிர் தரப்பினர் தகராறு செய்தனர். பிறகு, ஆத்திரமடைந்த வாலிபரின் உறவினர்கள், திண்டிவனம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது, அங்கிருந்த ஏழுமலை என்பவருக்கு சொந்தமான டீக்கடையை மறியலில் ஈடுபட்டவர்கள் அடித்து, நொறுக்கி சூறையாடியுள்ளனர்.

    சூறையாடப்பட்ட டீக்கடை இளம்பெண் தரப்புடையது. இதனால், போலீஸ் நிலையம் அருகே திரண்டிருந்த இளம் பெண் தரப்பினர், மறியலில் ஈடுபட்ட எதிர் தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டனர். இருத்தரப்பினரும் கல்வீசி தாக்கி பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர்.

    இதனால், அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. மோதலை தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புக்குளம், தனிப்பிரிவு ஏட்டுக்கள் சுரேஷ், யோகானந்தம் ஆகிய 3 போலீஸ்காரர்களும் தாக்கப்பட்டனர்.

    தகவலறிந்த செய்யாறு டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட கும்பலை தடியடி நடத்தி கலைத்தனர். வன்முறையை கட்டுப்படுத்தி, தாக்குதலில் காயம் அடைந்த 3 போலீஸ்காரர்களையும் மீட்டனர்.

    இருபிரிவினர் மோதலால் அப்பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. வன்முறையில் ஈடுபட்ட இருத்தரப்பையும் சேர்ந்த 40 பேரை பிடித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது நடவடிக்கைக்கு பயந்து இருத்தரப்பையும் சேர்ந்த ஆண்கள் ஊரில் இருந்து வெளியேறி தலைமறைவாகி விட்டனர். வீடுகளில் பெண்கள் மட்டுமே உள்ளனர்.

    வன்முறை குறித்து தகவலறிந்ததும், எஸ்.பி. பொன்னி நள்ளிரவில் தெள்ளாருக்கு வந்து விசாரணை நடத்தினார். மோதல் நடந்த இடத்தை பார்வையிட்டார்.

    பதட்டம் நீடிப்பதால், 50-க்கும் மேற்பட்ட போலீசார் தெள்ளார் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×