search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போர்க்கப்பலை பார்க்க 50 ஆயிரம் பேர் திரண்டனர்
    X

    போர்க்கப்பலை பார்க்க 50 ஆயிரம் பேர் திரண்டனர்

    சென்னை துறைமுகத்தில் போர்க்கப்பலை பார்க்க இன்று மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் தீவுத்திடலில் திரண்டனர்.

    சென்னை:

    மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் நடந்த ராணுவ கண்காட்சியையொட்டி சென்னை துறை முகத்தில் போர்க்கப்பல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த போர்க்கப்பல் கண்காட்சி நேற்று முன் தினம் தொடங்கியது. பொதுமக்கள் பார்ப்பதற்காக அரவிந்த், ‌ஷயாத்ரி, சுமத்ரா, ஹமோர்தா ஆகிய 4 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    நேற்று முன்தினம் போர்க்கப்பலை பார்க்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். ஆனால் 11 ஆயிரத்து 700 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கப்பலை பார்வையிட வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதையடுத்து நேற்றும், இன்றும் அதிக அளவில் பொதுமக்கள் கப்பலை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று மட்டும் 28 ஆயிரத்து 810 பேர் கப்பல்களை பார்த்தனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகம் பேர் கப்பலை பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று காலையில் இருந்தே கப்பலை பார்ப்பதற்காக சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் குவியத் தொடங்கினார்கள்.

    இன்று மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் தீவுத்திடலில் திரண்டனர். அவர்கள் ஆதார் அட்டையை காண்பித்து டோக்கன் பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்கள் டோக்கன் நம்பரின் அடிப்படையில் தீவுத்திடலில் இருந்து பஸ்சில் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 4 கப்பல்களையும் பார்வையிட 10 நிமிடம்முதல் 15 நிமிடம் வரை ஒதுக்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் மீண்டும் துறைமுகத்தில் இருந்து தீவுத்திடலுக்கு பஸ்சில் அழைத்து வந்து விடப்பட்டனர். பயணிகளை அழைத்து செல்வதற்கு மட்டும் 56 பஸ்கள் இயக்கப்பட்டன. குழந்தைகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என எல்லா தரப்பினரும் கப்பலை பார்வையிட வந்திருந்தனர் கப்பல் கண்காட்சிக்கு இன்றே கடைசி நாள் என்பதால் அதிக அளவில் கூட்டம் கூடியது.


    கப்பலை பார்வையிட பொது மக்களுக்கு ஏற்பாடு செய்திருப்பது தொடர்பாக தமிழ்நாடு-புதுச்சேரி கடற்படை அட்மிரல் ஸ்ரீ அல்பட்நாகர் கூறியதாவது:-

    கப்பல் கண்காட்சி தொடர்பாக மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கண்காட்சியை பார்வையிட 3 நாட்களாக ஏராளமானோர் குவிந்துள்ளனர். நேற்று முன்தினம் 11 ஆயிரத்து 700 பேர் பார்த்தனர். நேற்று 28 ஆயிரத்து 810 பேர் வந்தனர். இன்று 50 ஆயிரம் பேர் திரண்டுள்ளனர். 3 நாட்களில் சுமார் 90 ஆயிரம் பேர் கப்பல்களை பார்த்துள்ளனர்.

    கப்பல்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தீவுத் திடலுக்கு வரும் பொது மக்கள் உடனுக்குடன் அழைத்து செல்லப்படுகிறார்கள். அவர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு உதவுவதற்காக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கப்பலை பார்க்க வந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    உமா மகேஸ்வரி (வியாசர்பாடி):-

    நான் இதுவரை கப்பலை நேரில் பார்த்தது கிடையாது. இப்போது முதல் முறையாக கப்பலை பார்க்க குடும்பத்துடன் வந்துள்ளேன். இன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் காலை 6 மணிக்கே வந்துவிட்டேன். கப்பலை பார்த்தது மிகுந்த சந்தோ‌ஷத்தை அளித்தது.

    பத்மசரண் (மாணவர்):-

    நான் கிண்டியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறேன். ஒரு கப்பலை பார்க்க வாய்ப்பு கிடைப்பதே அபூர்வம். ஆனால் இங்கு ஒரே நேரத்தில் 4 கப்பல்களை பார்க்க வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. கப்பலை பார்வையிட கடற்படை, மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவை சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளன. இந்த கப்பல்களை சென்னை மக்கள் பார்க்க 3 நாட்கள் போதாது. இன்னும் கூடுதலாக சில நாட்கள் அனுமதித்திருந்தால் இன்னும் ஏராளமான மக்களுக்கு கப்பல்களை பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    Next Story
    ×