search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி பிரச்சினைக்காக எனது வீட்டிலேயே ஒருவரை இழந்து விட்டேன்- வைகோ உருக்கம்
    X

    காவிரி பிரச்சினைக்காக எனது வீட்டிலேயே ஒருவரை இழந்து விட்டேன்- வைகோ உருக்கம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் எனது வீட்டிலேயே ஒருவரை இழந்து விட்டேன் என்று வைகோ உருக்கமாக தெரிவித்துள்ளார். #cauveryissue #vaiko #saravanasuresh

    கோவில்பட்டி:

    விருதுநகர் ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்தவர் சரவண சுரேஷ் (வயது 50). இவர் அட்டை வியாபாரம் செய்து வந்தார். இவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மைத்துனர் ராமானுஜத்தின் மகன் ஆவார்.

    நேற்று முன்தினம் இவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீக்குளித்தார். மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சரவண சுரேஷ் நேற்று பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குலசேகரபுரம் என்ற பெருமாள்பட்டிக்கு நேற்று மாலையில் வேனில் கொண்டு வரப்பட்டது. அந்த வேனில் வைகோவும் உடன் வந்தார்.

    சரவண சுரேசின் வீட்டின் முன்பு அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முன்னாள் எம்.பி.க்கள் தங்கவேல், ஈரோடு கணேச மூர்த்தி, சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மற்றும் ம.தி.மு.க.வினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    சரவண சுரேசின் உடல் மீது ம.தி.மு.க. கொடி போர்த்தப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சரவண சுரேசின் உடலை ஊர்வலமாக அங்குள்ள மயானத்துக்கு எடுத்து சென்றனர். சரவண சுரேசின் உடலுக்கு அவருடைய மகன் ஜெயசூர்யா எரியூட்டினார்.

    இதனை தொடர்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில் நீயூட்ரினே திட்டத்தினை எதிர்த்து சிவகாசி ரவி தீக்குளித்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தற்போது சரவணன் சுரேஷ் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்கள் தான் தீக்குளிக்கின்றனர், தலைவர்கள் தீக்குளிப்பதில்லை என்று விமர்சனம் வருவது உண்டு. இன்று எனது வீட்டில் ஒருவரை இழந்துள்ளேன்.

    சரவண சுரேஷ் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயிர் துறந்துள்ளார்.

    மு.க.ஸ்டாலின், திருமாவளவன், ஜவாஹிருல்லா, முத்தரசன், வைரமுத்து ஆகியோர் மிகவும் வருத்தப்பட்டு ஆறுதல் கூறினார். எனக்கு அறிமுகம் இல்லாத நடிகர் சிம்பு தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்து, ஆறுதல் கூறினார்.

    சரவண சுரேஷ் எதற்காக தன் உயிரை இழந்தாரோ, அந்த பிரச்சினைகளுக்காக அதற்காக எனது போராட்டத்தினை தீவிரப்படுத்துவேன் என்றார். #tamilnews #cauveryissue #vaiko #saravanasuresh

    Next Story
    ×