
ஆற்காடு:
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பூண்டி மேட்டுத் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் தேவன் (வயது 50). கட்டிட மேஸ்திரி. இவரது நண்பர், பூண்டி அணைக்கட்டு ரோட்டை சேர்ந்த பாண்டியன் (52). இவர், செல்போன் கடை வைத்துள்ளார்.
இவர்கள் 2 பேரும், நேற்று இரவு வாலாஜா அடுத்துள்ள கடப்பேரி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு பைக்கில் சென்று விட்டு நள்ளிரவு வீடு திரும்பினர்.
அப்போது, பின்புறம் வந்த கார் திடீரென பைக் மீது மோதியது. இந்த விபத்தில், பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு நடுரோட்டில் விழுந்ததில் தேவனுக்கும், பாண்டியனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி விட்டார். உயிருக்கு போராடிய 2 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நண்பர்கள் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து, காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர். #tamilnews