
திருவாரூர்:
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் மட்டுமின்றி நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக எண்ணெய் கிணறு அமைக்கும் பணியினை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக விளை நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கும் பணிகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள கூடூர் என்ற இடத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இந்த தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணிகளை தடுத்து நிறுத்தி பதிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எண்ணை குழாய்கள் மீது அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது,‘‘காவிரி டெல்டா மாவட்டங்களை விட்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும்’’ என தெரிவித்தனர்.