search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியின் ஏஜெண்டாக என்.ஆர்.காங்கிரஸ் செயல்படுகிறது- நாராயணசாமி கடும் தாக்கு
    X

    மோடியின் ஏஜெண்டாக என்.ஆர்.காங்கிரஸ் செயல்படுகிறது- நாராயணசாமி கடும் தாக்கு

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். #narayanasamy #nrcongress #cauveryissue

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சென்னையில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க கடந்த 12-ந்தேதி பிரதமர் வந்தார். இந்த விழாவுக்கு வரும்படி ராணுவ மந்திரி நிர்மலா சீத்தராமனிடம் இருந்து அழைப்பும், ராணுவத்துறையிடம் இருந்து கடிதமும் வந்தது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் முன்வராததால் இந்த விழாவை நான் புறக்கணித்தேன். அன்றைய தினம் காரைக்காலில் நடந்த காவிரி மீட்பு நடைபயணத்தில் பங்கேற்றேன். வாரியம் அமைக்க காலதாமதம் செய்ததன்மூலம் தமிழகம், புதுவை மக்களுக்கு மோடியும், பா.ஜனதாவும் மிகப்பெரும் துரோகம் இழைத்துள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் சென்னை வருகையின்போது சமூக அமைப்புகள், திரைத்துறையினர் கறுப்புக்கொடி காட்டினர். பிரதமர் ஹெலிகாப்டரிலேயே விழா இடங்களுக்கு சென்று டெல்லியும் திரும்பி விட்டார்.

    2 ஆண்டாக வாய்மூடி மவுனமாக இருந்து வந்த ரங்கசாமி தற்போது பேச ஆரம்பித்துள்ளார். எங்கள் அரசுக்கு காவிரி விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் உறுதுணையாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். காவிரிக்காக கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரே ஒரு எம்.எல்.ஏ. மட்டும் பங்கேற்றார்.

    என்ஆர்.காங்கிரசுக்கு காரைக்காலில் 2 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் சட்டமன்றத்தில் 8 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஒருவர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பங்கேற்கவில்லை. அதோடு சட்டமன்றத்தில் வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியபோதும் என்.ஆர்.காங்கிரஸ் பங்கேற்கவில்லை.

    இதன் மூலம் காரைக்கால் விவசாயிகள் மீதும், மக்கள் மீதும் அவர்களின் அக்கறை என்ன? என்பது தெளிவாகிறது. தனது ஆட்சி காலத்தில் காவிரி நீர் பெற வழக்கு தொடர்ந்ததாக ரங்கசாமி கூறியுள்ளார்.

    அவர் தொடர்ந்த வழக்கை தொடர்ந்து நடத்தி 2 வெற்றிகளை பெற்றுள்ளோம். அதில் 6 டி.எம்.சி. என்பதை 7 டி.எம்.சி. என உயர்த்தி பெற்றுள்ளோம்.

    காவிரி நீர் பெற காரைக்கால் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் கள்கூட குரல் கொடுக்க வில்லை. 5-ந்தேதி நடந்த பந்த் போராட்டத்துக்குகூட ஆதரவு தரவில்லை. ஒட்டு மொத்தமாக என்.ஆர்.காங்கிரஸ் மோடிக்கு ஆதரவாக செயல்படுகிறது. மோடி அரசுக்கு ஏஜெண்டாக என்.ஆர்.காங்கிரஸ் உள்ளது.

    சென்னை வந்த பிரதமரிடம் தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் மேலாண்மை வாரியம் அமைக்க கடிதம் கொடுத்தனர். இதுவரை பிரதமரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

    இந்த நிலையில் நான் பிரதமரை சந்தித்து வலியுறுத்தி இருந்தால் வாரியத்தை அமைக்க மோடி முன்வந்திருப்பாரா? அமித்ஷாவை ரங்கசாமி டெல்லியில் சென்று சந்தித்தார்.

    அவர் எதற்காக சந்தித்தார்? என எல்லோருக்கும் தெரியும். ஆனால், அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக ரங்கசாமி வலியுறுத்தியிருக்க வேண்டியதுதானே? தன் ஆட்சி காலத்தில் இலவச அரிசி, முதியோர் பென்‌ஷன் ஆகியவற்றை முறையாக வழங்கியதுபோல ரங்கசாமி காட்டிக்கொண்டுள்ளார். முதியோர் பென்‌ஷன் 7 மாதத்திற்கு ஒரு முறை வழங்கினர். இலவச அரிசி 60 மாதத்தில் 10 முறைதான் வழங்கினார்.

    ஆனால் எங்களுக்கு எத்தனையோ இடையூறு இருந்தும், முட்டுக்கட்டைகள் இருந்தும் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

    அதோடு அரசின் வருவாயை ரூ.180 கோடி உயர்த்தி உள்ளோம். கல்வி, சுகாதரம், சட்ட ஒழுங்கு, நிர்வாகத்தில் புதுவை முதன்மையான மாநிலமாக உள்ளது. இதற்கான விருதுகளையும் பெற்றுள்ளது.

    ஆனால் எதிர்க்கட்சியாக செய்ய வேண்டிய செயல்களை என்.ஆர்.காங்கிரஸ் செய்யவில்லை. எங்கள் அரசை விமர்சிக்க ரங்கசாமிக்கும், என்.ஆர்.காங்கிரசுக்கும் தகுதி இல்லை.


    எங்கள் அரசுக்கு ரங்கசாமியிடம் இருந்து நற்சான்றிதழும் தேவையில்லை. காவிரி வாரியம் அமைக்காததால் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காரைக்கால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர் கமலக்கண்ணன், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர். #tamilnews #narayanasamy #nrcongress #cauveryissue

    Next Story
    ×