search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உறவினர் வீட்டில் நகைகள் கொள்ளை
    X

    திருச்சி அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உறவினர் வீட்டில் நகைகள் கொள்ளை

    திருச்சி அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உறவினர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள திண்டுக்கரை ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். பெரும் நிலக்கிழாரான இவர் விவசாயம் செய்து வருகிறார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.பி. பூனாட்சியின் உறவினரும் ஆவார்.

    நேற்று இவர் வெளியூர் சென்று விட்டார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர். இரவு அவர்கள் வீட்டின் மாடிக்கு சென்று படுத்து தூங்கினர். இன்று காலை கீழே வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 150 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. நகையின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும். பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது தெரியவில்லை.

    இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி மாவட்ட எஸ்.பி.ஜியாவுல்ஹக், ஜீயபுரம் டி.எஸ்.பி.சீனிவாசன், இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. நாய் சிறிது தூரம் மோப்பம் பிடித்தப்படி சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது இன்று காலை அப்பகுதியில் உள்ள ஆற்றிற்கு பொது மக்கள் சென்ற போது வட மாநிலத்தை சேர்ந்த 6 பேர் அங்கு பதுங்கி இருந்துள்ளனர். பொதுமக்களை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பொது மக்கள், அவர்களை விரட்டி சென்றுள்ளனர்.

    இதில் 2 பேர் மட்டும் போலீசில் சிக்கினர். மற்ற 4 பேர் தப்பியோடி விட்டனர். பிடிபட்ட 2 பேரையும் பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், நேற்று நள்ளிரவு ரமேஷ் வீட்டிற்குள் புகுந்து கைவரிசையில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. ஜீயபுரம் பகுதியில் போர்வை விற்று வந்த அவர்கள், ரமேஷின் வீட்டை நோட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து 2 பேரிடம் போலீசார் நடத்தி வரும் விசாரணையின் மூலம் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. தப்பியோடிய 4 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×