search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் போர்க்கப்பலை பார்வையிட 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி
    X

    சென்னையில் போர்க்கப்பலை பார்வையிட 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி

    சென்னையில் போர்க்கப்பலை பார்க்க இன்று அதிகாலையிலேயே ஏராளமானோர் தீவுத்திடலில் ஆர்வமுடன் திரண்டனர்.

    சென்னை:

    மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் கடந்த 11-ந்தேதி மத்திய பாதுகாப்பு துறையின் ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கியது.

    அதிகாரப்பூர்வமாக நேற்று வர்த்தக அரங்குகளை பிரதமர் மோடி திறந்து வைத்து முப்படையினரின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

    கண்காட்சியின் 3-ம் நாளான இன்று அரங்கம் அமைத்துள்ள 47 வெளிநாட்டு ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் மற்றும் வெளி நாட்டில் இருந்து வந்துள்ள 162 நாட்டு ராணுவ வர்த்தக பிரிவு பிரதிநிதிகளின் கருத்தரங்கு நடக்கிறது.

    ராணுவ கண்காட்சியையொட்டி வந்துள்ள அரவிந்த், ‌ஷயாத்ரி, சுமத்ரா, ஹமோர்தா ஆகிய 4 போர்க்கப்பல்கள் சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை இன்றும், நாளை மறுநாளும் (15-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பொது மக்கள் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதன்படி போர்க்கப்பலை பார்க்க இன்று அதிகாலையிலேயே ஏராளமானோர் தீவுத்திடலில் ஆர்வமுடன் திரண்டனர்.


    அடையாள அட்டையுடன் பதிவு செய்து காத்திருந்த அவர்களை துறைமுகத்துக்குள் அழைத்து செல்ல பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 5 ஆயிரம் பேர்வரையில் கப்பலை பார்க்க அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் பிறகும் ஏராளமானோர் தீவுத்திடலில் காத்திருந்தனர்.அவர்கள் அமர நாற்காலியும், சாமியானா பந்தலும் போடப்பட்டு இருந்தது.

    நேரம் செல்ல செல்ல தீவுத் திடலில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது. காலை 9 மணி அளவில் போர்க்கப்பலை பார்க்கும் பொது மக்களின் எண்ணிக்கை முடிந்துவிட்டது என்று பாதுகாப்புக்கு நின்ற கடலோர காவல் படையினர் தெரிவித்தனர், இதனால் போர்க்கப்பலை காண வந்த பொது மக்களுக்கும் காவல் படையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அதிகாரிகள் கூறும்போது, ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேரை அனுமதிக்க திட்டமிட்டிருந்தோம். காலை 8 மணிக்கே 5 ஆயிரம் பேர் வந்துவிட்டனர் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து போர்க் கப்பலை காண வந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வெளியூரில் இருந்து வந்த பள்ளி மாணவ- மாணவிகளும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    காலை 11 மணி அளவில் கூடுதலாக ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். அதற்காக தீவுத்திடலில் வாசல் கதவு திறக்கப்பட்ட போது ஏராளமானோர் முண்டியடித்து சென்றனர். தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கேயே காத்து கிடந்தனர்.

    இதுபற்றி மடிப்பாக்கத்தை சேர்ந்த ஆராமுதன் கூறியதாவது:-

    நானும், மனைவியும் போர்க் கப்பலை காண காலை 9 மணிக்கே வந்து விட்டோம். ஆனால் உள்ளே அனுமதிக்கவில்லை. 5 ஆயிரம் பேர் ஏற்கனவே சென்றுவிட்டதாக தெரிவித்தனர். இதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

    நிதேஷ் (சவுகார்பேட்டை): உறவினர்கள் 20 பேருடன் வந்தேன். எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை வந்து பார்க்கும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். அன்றும் இப்படித்தான் இருக்கும்.


    போர்க்கப்பலை காண முறையான ஏற்பாடு செய்யவில்லை. பலர் உயர் அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் சென்று விட்டனர். இதனால் சாதாரண மக்களால் போர்க் கப்பலை பார்க்க முடிய வில்லை.

    பாலசுப்பிரமணியன் (ஓய்வு பெற்ற அரசு ஊழியர், சைதாப்பேட்டை):- எனக்கு 75 வயது ஆகிறது. போர்க்கப்பலை பார்க்கும் ஆர்வத்தில் இங்கு வந்தேன். ஆனால் அனுமதிக்க வில்லை. எனது வயதை காரணம் காட்டி அனுமதிக்கும்படி கேட்டபோதும் திருப்பி அனுப்பிவிட்டனர்.

    போர்க்கப்பலை காணும் நாட்களை அதிகரிக்க வேண்டும். நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர். முறையான ஏற்பாடும் அறிவிப்பும் செய்யாததே இந்த குழப்பத்துக்கு காரணம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் போர்க்கப்பலை காண அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அன்று முறையான அறிவிப்புகள் செய்து அனைவரும் போர்க்கப்பலை காண ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியின் கடைசி நாளான நாளை (14-ந் தேதி) அரங்குகளை பொது மக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதன் இணையதளத்தில் ரூ. 100 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதற்கான அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டையுடன் கண்காட்சி நடைபெறும் இடத்துக்கு பொது மக்கள் சென்று ராணுவ தளவாடங்களை பார்வையிடலாம்.

    கண்காட்சியையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 11-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கண்காட்சி நடைபெறும் இடத்துக்கு செல்ல கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    கண்காட்சியை பொது மக்கள் கண்டுகளிக்க ஏதுவாக ஏற்கனவே அந்த வழியாக இயக்கப்படும் 15 வழித்தடங்களுடன், கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் தாம்பரம், திருவான்மியூர், அடையாறு, மாமல்லபுரம் போன்ற இடங்களில் இருந்து திருவிடந்தைக்கு மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படுகின்றன.

    மேலும் வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து கண்காட்சி நடைபெறும் இடத்துக்கு செல்ல இலவச மினி பஸ் வசதியும், மாநகர போக்குவரத்து கழகத்தால் செய்யப்பட்டு உள்ளது. #tamilnews

    Next Story
    ×