search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி போராட்டத்தில் பஸ்கள் உடைப்பு- கைதான 17 மாணவர்கள் சிறையில் அடைப்பு
    X

    திருச்சி போராட்டத்தில் பஸ்கள் உடைப்பு- கைதான 17 மாணவர்கள் சிறையில் அடைப்பு

    திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பஸ்கள் மீது கல் வீசி கண்ணாடிகளை உடைத்த வழக்கில் கைதான 17 மாணவர்கள் சிறையில் அடைத்தனர்.
    திருச்சி:

    திருச்சி கோர்ட்டு எம்.ஜி. ஆர். சிலை முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நேற்று முன்தினம் இரவு மாணவர்கள் திடீரென கூடி போராட்டம் நடத்தினர்.

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.

    அப்போது போலீசார் அவர்களை கலைந்து போக கூறி மறுத்ததால் தடியடி நடத்தினர். இதில் சில மாணவர்கள் காயம் அடைந்தனர். ஆத்திரத்தில் சிலர் அந்த வழியாக சென்ற அரசு பஸ் மற்றும் கர்நாடகா பஸ் மீது கல் வீசி கண்ணாடிகளை உடைத்தனர்.

    இதை தொடர்ந்து அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் தினேஷ், மாநகர தலைவர் இப்ராகிம் உள்பட 20 மாணவர்கள் மீது திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார் மற்றும் தில்லைநகர் போலீசார் பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

    நேற்று மாணவர்கள் அனைவரையும் போலீசார் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் மற்றும் போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்திருந்தனர்.

    இதை கண்டித்து மாணவர்கள் உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட னர். ஆனாலும் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் திருச்சி மாஜிஸ்திரேட்டு திருநாவுக்கரசு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 20-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன் பிறகு மாலையில் 20 பேரும் போலீஸ் வேனில் ஏற்றி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்பதால் அவர்களை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைக்கவில்லை. மீதி 17 பேர் திருச்சி சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிறுவர்கள் 3 பேரும் தஞ்சையில் உள்ள சிறுவர் ஜெயிலுக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    இதற்கிடையே மாணவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றபோது அவர்களின் பெற்றோர்கள் வேனுக்கு முன் நின்று போலீசுக்கு எதிராக கண்டன கோ‌ஷம் எழுப்பினர். மறியலும் செய்தனர்.

    மாணவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறினர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

    போராட்டம், கைதான மாணவர்கள் சிறையில் அடைப்பு சம்பவத்தை தொடர்ந்து திருச்சியில் அனைத்து இடங்களிலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×