search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல்லில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் கொள்ளை- மர்ம நபர்கள் கைவரிசை
    X

    நாமக்கல்லில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் கொள்ளை- மர்ம நபர்கள் கைவரிசை

    நாமக்கல்லில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருக்கும் சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல், திருச்சி சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஜி.ஆர்.என். நகரில் வசித்து வருபவர் கணேசன் (வயது 55). தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளரான இவர் தற்போது பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

    இவருடைய வீட்டிற்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் 2, 3 ஆட்டோக்களில் வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டில் தூங்காமல் யாரும் கண்விழித்து கொண்டு இருக்கிறார்களா? என வெளிபுற ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர்.

    அப்போது வீட்டிற்குள் கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். எனவே தற்போது வீட்டிற்குள் புகுந்து திருடினால் சிக்கி விடுவோம் என்று கருதிய அந்த கும்பல் வெளிப்புறத்தில் இருந்த பொருட்களை திருட முடிவு செய்தது.

    வீட்டை சுற்றியும் கணேசன் பாதுகாப்புக்காக இரும்பு கிரில் கதவுகளை அமைத்திருந்தார். இந்த கதவுகளை திருடி இரும்பு கடையில் விற்றால் செலவுக்கு பணம் கிடைக்கும். இதை வைத்து கொஞ்சம் நாள் ஓட்டி விடலாம் என கருதி இரும்பு கிரில் கதவுகளை ஒவ்வொன்றாக கழற்றினார்கள்.

    வீட்டின் முன்பக்கம், பின்பக்கம் என்று போடப்பட்டிருந்த மொத்தம் 4 இரும்பு கிரில் கதவுகளை கழற்றினார்கள். அந்த இரும்பு கதவுகளை அப்படியே தூக்கிக்கொண்டு சென்று ஆட்டோவில் ஏற்றினார்கள்.

    இதனால் தாங்கள் திருட வந்ததற்கு உரிய பயன் கிடைத்து விட்டது. எதுவுமே திருடாமல் சென்றால் தங்களை ஏளனமாக நினைத்து விடுவார்கள் என அந்த மர்ம கும்பல் நினைத்ததாக தெரிகிறது.

    மேலும் வீட்டின் வாசல்படி பக்கத்தில் உள்ள ஹாலில் இருந்த தையல் மிஷினை கழற்றி அலக்காக தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ஏற்றினார்கள்.

    இந்த தையல் மிஷினை ஆட்டோவில் ஏற்றிய சத்தம் அக்கம், பக்கத்தில் குடியிருப்பவர்களுக்கு கேட்டது. அவர்கள் உடனே எழுந்து வீட்டின் வெளியே நின்று பார்த்தபோது கணேசன் வீட்டில் உள்ள பொருட்களை மர்ம கும்பல் திருடி ஆட்டோவில் ஏற்றுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் திருடர்கள்... திருடர்கள்... என கூச்சல் போட்டனர். அவர்களது கூச்சல் சத்தத்தை மர்ம நபர்கள் சற்றும் பொருட்படுத்தாமல் திருடிய பொருட்களுடன் அசால்டாக ஆட்டோவில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

    இந்த திருட்டு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த கணேசன் இது குறித்து நாமக்கல் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்டோவில் வந்து தி.மு.க. பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருக்கும் சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×