search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புஞ்சைபுளியம்பட்டியில் லாரி டிரைவர் அடித்து கொலை
    X

    புஞ்சைபுளியம்பட்டியில் லாரி டிரைவர் அடித்து கொலை

    புஞ்சைபுளியம்பட்டியில் லாரி டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி, சுபிஷ்கா கார்டனை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). லாரி டிரைவர்.

    இவரது மனைவி புஷ்பா (46). இவர்களுக்கு நந்தகுமார் (28) என்ற மகன் உள்ளார். அவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கார் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.

    ராஜேந்திரனும், புஷ்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். ராஜேந்திரன் திருப்பூரில் தங்கி இருந்து லாரி ஓட்டி வந்தார்.

    நந்தகுமாரும் பெருமாநல்லூரில் தங்கி உள்ளார். எனவே புஞ்சைபுளியம்பட்டியில் புஷ்பா மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் ராஜேந்திரன் நேற்று இரவு புஞ்சை புளியம்பட்டிக்கு வந்தார். அப்போது ராஜேந்திரனுக் கும், புஷ்பாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் புஷ்பா வீட்டின் முன்புள்ள காலி இடத்தில் பனியன் துணியால் சுற்றப்பட்டு ஒருவரது பிணம் கிடப்பதையும், பிணத்தின் அருகில் ஒரு கயிறும் கிடப்பதையும் அந்த பகுதி மக்கள் பார்த்தனர்.

    எனவே அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முகம், உடல் முழுவதும் துணியால் சுற்றப்பட்டு இருந்ததால் பிணமாக கிடப்பது யார்? என்று தெரியாமல் இருந்தது.

    இது குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணத்தை சுற்றியிருந்த துணியை அகற்றி போலீசார் பார்வையிட்டனர்.

    அப்போது துணிக்குள் அரை நிர்வாண நிலையில் ஒருவரது பிணம் இருப்பதும், அவரது தலையில் யாரோ பலமாக அடித்திருக்கும் காயம் இருந்ததும் தெரியவந்தது.

    எனவே அந்த நபரை யாரோ கொலை செய்து பிணத்தை துணியில் சுற்றி போட்டிருப்பது உறுதியானது. ஆனால் கொலை செய்யப்பட்டது யார்? என தெரியாததால் போலீசார் அது பற்றிய விசாரணையில் இறங்கினர்.

    புஷ்பாவின் வீட்டுக்கு முன்பு பிணம் கிடந்ததால் புஷ்பாவிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் பிணமாக கிடப்பது யார் என எனக்கு தெரியாது என்று புஷ்பா கூறி விட்டார்.

    எனினும் புஷ்பாவின் நடவடிக்கையில் போலீசார் சந்தேகம் அடைந்தனர். எனவே அவரை பற்றி அக்கம் பக்கத்தினர் விசாரித்தனர்.

    அப்போது புஷ்பாவுக்கு பெருமாநல்லூரில் ஒர்க் ஷாப் வைத்திருக்கும் மகன் இருப்பது தெரியவந்தது.எனவே போலீசார் பெருமாநல்லூருக்கு சென்று புஷ்பாவின் மகன் நந்தகுமாரை கண்டுபிடித்தனர்.

    இன்று காலை அவர் புஞ்சை புளியம்பட்டிக்கு அழைத்து வரப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தனது தந்தை ராஜேந்திரன் என்று அடையாளம் காட்டினார்.

    இதைத்தொடர்ந்து மீண்டும் புஷ்பாவிடம் போலீசார் கேட்டனர். அப்போது தான் புஷ்பாவும் கொலையுண்டது தனது கணவர் என போலீசாரிடம் தெரிவித்தார்.

    கொலை செய்யப்பட்ட ராஜேந்திரன் தனது கணவராக இருந்தும் அவர் யார் என்று தனக்கு தெரியாது என கூறியதால் புஷ்பா மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. எனவே புஷ்பாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×