search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில்  தி.மு.க.வினர் பஸ் மறியல்
    X

    பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் பஸ் மறியல்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுகவினர் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான வேலகவுண்டம்பட்டி, நல்லூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், பரமத்தி ஆகிய பகுதிகளில் முழு அடைப்பு காரணமாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு பஸ்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

    அப்போது அங்கு திடீரென்று பரமத்தி பேரூர் தி.மு.க. செயலாளர் மணி மாரப்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் திரண்டு வந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அரசு பஸ்சை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட் தி.மு.க.வினரை உடனே கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். அவர்களை பரமத்தியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் பஸ் நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருச்செங்கோடு நகர பகுதிகளில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதுபோன்று புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. அரசு பஸ்கள், டவுன் பஸ்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

    இதுபோன்று திருச்செங்கோடு சுற்று வட்டார கிராமங்களான எலச்சிபாளையம், சித்தாளந்தூர், மாணிக்கம்பாளையம், மோர்பாளையம் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

    மேச்சேரி பஸ் நிலையத்தில் இன்று காலை பயணிகளை ஏற்றுவதற்காக வந்த சேலம்-மேட்டூர் அரசு பஸ்சை தி.மு.க.வினர் மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    Next Story
    ×