search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவில் 12-ந்தேதி பந்த்- வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
    X

    கர்நாடகாவில் 12-ந்தேதி பந்த்- வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

    காவிரி நீர் சம்பந்தமாக தமிழகத்தில் இன்று பந்த் நடந்ததை கண்டித்து வருகிற 12ம் தேதி கர்நாடகாவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த போவதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
    ஓசூர்:

    தமிழக அரசியல் கட்சிகளை கண்டித்து ஓசூர் அருகே உள்ள கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் இன்று கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வட்டாள் நாகராஜ் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் சாலை மறியிலில் ஈடுபட்டனர். அவர்களை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக வட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இன்று எதிர்க்கட்சிகள் பந்த் நடத்த அழைப்பு விடுத்ததை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு எதிராக நாங்களும் வருகிற 12-ந்தேதி கர்நாடகாவில் முழுபந்த் நடத்த தீர்மானித்துள்ளோம். எக்காரணத்தை கொண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டோம். இதற்காக எதையும் சந்திக்க தயாராக உள்ளோம்.

    மேலும் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரை கர்நாடகத்தில் நுழைய விடமாட்டோம். அவர்களது திரைப்படங்களையும் முழுமையாக புறக்கணித்து கர்நாடகாவில் எந்த தியேட்டர்களிலும் வெளியிட அனுமதிக்க மாட்டோம்.

    தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடைபெற்று இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அன்றைய தமிழக முதல்வர்கள் காவிரி நீர் பங்கீடு சம்பந்ததாக கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து பேசி உரிய பங்கீனை பெறுவார்கள்.

    ஆனால் இன்று தமிழக அரசு காவிரி நீர் சம்பந்தமாக எங்களை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறது. அதுபோல் தமிழகத்தில் உள்ள தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே நாங்களும் இதை கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பஸ்கள் இயங்காது. கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டிருக்கும். தியேட்டர்கள் இயங்காது.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் காவிரி நீர் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள் என எச்சரிக்கிறோம். கர்நாடகவில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.#tamilnews
    Next Story
    ×