search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் இரவிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள்.
    X
    அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் இரவிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் 46-வது நாளாக நீடிப்பு

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்களின் தொடர் போராட்டம் இன்று 46-வது நாளாக நீடிக்கிறது. ஏராளமான ஆண்களும், பெண்களும் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #BanSterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் கழிவுகள் காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

    இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

    கடந்த வாரம் தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட பிரமாண்டமான கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இதனிடையே அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்களின் தொடர் போராட்டம் இன்று 46-வது நாளாக நீடிக்கிறது. ஏராளமான ஆண்களும், பெண்களும் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அங்கேயே சமையல் செய்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    போராட்டக்குழுவினர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பியும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். நேற்று இங்கு பெண்கள் கொளுத்தும் வெயிலில் முட்டி போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

     கொளுத்தும் வெயிலில் முட்டி போட்டு ஆர்ப்பாட்டம் செய்த பெண்கள்.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையில், தாசில்தார்கள் ராமச்சந்திரன், நம்பிராயர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் கண்ணன், வேளாண்மை இணை இயக்குனர் முத்து எழில் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் வந்தனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள்.

    மேலும் ஸ்டெர்லைட் ஆலையையும், அங்கு புதிதாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ள பகுதிகளையும் ஆய்வு செய்தனர். அ.குமரெட்டியாபுரம் கிராமத்திற்கு சென்ற அதிகாரிகள் குழுவினர் அங்குள்ள நிலத்தடி நீர் மாதிரிகளை சேகரித்தனர். 8 இடங்களில் தண்ணீர் மாதிரிகள் சேரிக்கப்பட்டன.

    இதனிடையே ஆய்வுக்கு வரும் அதிகாரிகளை போராட்ட குழுவினர் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து தெரிவிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதிகாரிகள் போராட்டக்குழுவை சேர்ந்தவர்களையோ, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களையோ சந்திக்கவில்லை. இது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என அறிய இந்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

    இதனிடையே தூத்துக்குடி அருகே உள்ள அத்திரமப்பட்டியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வந்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தை அங்குள்ள பொதுமக்கள் நேற்று இழுத்து பூட்டினார்கள். மேலும் அங்கிருந்த அறிவிப்பு பேனர்களும் தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘ஸ்டெர்லைட் நடத்தும் இந்த மையம் எங்களுக்கு தேவையில்லை. எங்கள் பகுதியில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப உள்ளோம்’ என்றனர்.

    ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான கல்லூரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கல்லூரிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நேற்று மாலை மாணவர்கள் அங்குள்ள பூங்கா முன்பு போராட்டத்திற்கு வருவதாக வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரவியது. இதையடுத்து பூங்காவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #Thoothukudi #Sterlite #SterliteProtest  #BanSterlite #TalkAboutSterlite #Tamilnews
    Next Story
    ×