search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் ராணுவ கண்காட்சி
    X

    மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் ராணுவ கண்காட்சி

    மாமல்லபுரத்தில் ராணுவ கண்காட்சி நடைபெறும் இடம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. நீர்மூழ்கி கப்பல், போர்க்கப்பலை சுற்றிப் பார்க்க கடலில் மிதவை பாலம் அமைக்கப்படுகிறது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள இந்த சமய அறநிலையத்துக்கு சொந்தமான சுமார் 280 ஏக்கர் இடத்தில் கண்காட்சி அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.

    ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதையடுத்து இப்போதே அப்பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கண்காட்சி நடைபெறும் இடத்தில் உள்ள பாதுகாப்பு குறித்து நேற்று மாலை ஐ.ஜி ஸ்ரீதரன், மனோகரன், டி.ஐ.ஜி தேன்மொழி, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் ஆலோசணை நடத்தினர்.

    இதில் அங்கு தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைப்பது, மோப்ப நாய்களை கொண்டு வருவது, வெடிகுண்டு நிபுணர்களை பணி அமர்த்துவது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    ராணுவ கண்காட்சி நடைபெறும் இடம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கண்காட்சியில் ராணுவ பலத்தை காட்டும் வகையில் ஏராளமான புதிய வகை ஆயுதங்கள் இடம் பெறுகின்றன. இதில் ராணுவ கம்ப்யூட்டரில் இயங்கும் நவீன பீரங்கிகள், ஏவுகணைகள், எதிரிகளின் ஆளில்லா விமானங்களை கண்காணிக்கும் ரேடார்கள், போன்றவை முக்கியமானவையாகும்.

    இவைகளை வெளிநாடு மற்றும் வெளிமாநில ராணுவ அதிகாரிகள் காரில் சென்று பார்வையிட வசதியாக 3 கி.மீ தூரத்துக்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அங்கு பிரமாண்டமான 12 குளிர் சாதன அரங்கமும், 3 சிறு கருத்தரங்க கூடமும் அமைக்கப்படுகிறது. இதில் வெளிநாட்டு ராணுவத்தினர் மட்டும் அணுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    கடலோர பாதுகாப்பு படையின் போர் கப்பலை கடலில் நிறுத்தவும் திட்டமிட்டுள்ளனர். கண்காட்சிக்கு கொண்டுவர இருக்கும் போர் கப்பல்கள் விசாகப்பட்டிணம், கொச்சின், கோவா பகுதிகளில் இருந்து புறப்பட்டுள்ளது. மேலும் சிறிய வகை நீர் மூழ்கி கப்பலும் இங்கு வர இருக்கிறது.

    கடலில் நிறுத்தப்படும் போர்க்கப்பல், நீர்மூழ்கி கப்பலை சுற்றிப்பார்க்க கடலுக்குள் தற்காலிக மிதவை பாலமும் அமைக்கப்படுகிறது.

    கண்காட்சி நடைபெறும் இடத்தில் தடையின்றி மின்சாரம் கிடைக்க மின்சார வாரியத்தினர் அங்கு தனி டிரான்ஸ்பாமர் அமைத்து வருகிறார்கள். சாலையோரம் வண்ணம் தீட்டும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இதனால் கண்காட்சி அமையும் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதுவரை அரங்குகள் அமைக்கும் பணி 25 சதவீதம் முடிவடைந்துள்ளது.
    Next Story
    ×