search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் குட்கா கடத்தலை தடுக்க வேண்டும் - ரெயில்வே துறைக்கு உணவு பாதுகாப்பு கமி‌ஷனர் கடிதம்
    X

    ரெயிலில் குட்கா கடத்தலை தடுக்க வேண்டும் - ரெயில்வே துறைக்கு உணவு பாதுகாப்பு கமி‌ஷனர் கடிதம்

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை ரெயில் மூலம் கடத்தி கொண்டு வருவதை தடுக்க வேண்டும் என்று ரெயில்வே துறைக்கு உணவு பாதுகாப்பு கமி‌ஷனர் கடிதம் எழுதியுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் குட்கா என்னும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் விற்கவோ, குடோனில் இருப்பு வைத்து இருந்தாலோ அது தண்டனைக்குரிய குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    டீ கடைகள், பீடா கடைகள், மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் டெல்லியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரசில் கண்டெய்னரில் குட்கா கொண்டு செல்லப்பட்டு மதுரை ஜங்‌ஷனில் இறக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், ரெயில்வே லஞ்ச ஒழிப்பு பிரிவினரும் சேர்ந்து நடத்திய சோதனையில் 200 பண்டல் குட்கா கைப்பற்றப்பட்டது.

    ஆனால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. உணவு பாதுகாப்பு துறை மாதிரியினை எடுத்து சென்று சோதனை நடத்தி ஆய்வறிக்கைக்காக காத்திருக்கிறார்கள்.

    ரெயில்வே விதிப்படி புகையிலை தடை செய்யப்பட்ட பொருள் அல்ல என்று ரெயில்வே தரப்பில் தெரிவித்துள்ளது. அந்த ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட குட்காவை இறக்குவதற்கு சட்டத்திற்கு விரோதமாக 20 நிமிடம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமான ரெயில் கால அட்டவணைப்படி 5 நிமிடங்கள் மட்டுமே அங்கு நிற்க வேண்டும்.



    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை ரெயில்கள் மூலம் கொண்டு வருவதால் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ரெயில் மூலம் வடமாநிலங்களில் இருந்து குட்கா முறைப்படி பதிவு செய்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படுவது புகையிலை எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரானதாகும் என்று அரசு கருதுகிறது.

    தமிழகத்தில் குட்கா விற்பனையை முற்றிலுமாக தடுக்க உணவு பாதுகாப்பு கமி‌ஷனர் பி.அமுதா ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். குட்காவுக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவு மற்றும் மதுரைக்கு குட்கா ரெயில் மூலம் கொண்டு செல்லப்பட்டது குறித்த ஆவணங்களை இணைத்து அதில் குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.

    தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு ரெயில்வே துறை ஒத்துழைப்பு தர வேண்டும். தடை செய்யப்பட்ட குட்கா ரெயிலில் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் ரெயில்வே விதிகளின்படி குட்கா ரெயிலில் கொண்டு செல்வது சட்டப்படி குற்றமல்ல. ஆனாலும் ஆய்வக சோதனை முடிவு வந்த பிறகுதான் வழக்கு பதிவு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
    Next Story
    ×