search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த மாதம் புதிய சம்பளம் கிடைக்கும்
    X

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த மாதம் புதிய சம்பளம் கிடைக்கும்

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் இந்த மாதம் முதல் புதிய சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் 8 மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
    சென்னை:

    தமிழக எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளத்தை ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை 19-ந்தேதி அறிவித்தார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தியும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக அதிகரித்தும், தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.50 கோடியாக உயர்த்தியும் அறிவித்தார்.

    இதில் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வு நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் புதிய சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. சம்பளத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக சட்டசபையில் கடந்த ஜனவரி மாதம் கவர்னர் உரையின் போது சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.

    அப்போது சட்டசபையில் பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ‘‘பஸ் தொழிலாளர்கள் பிரச்சனை தீரும் வரை உயர்த்தப்பட்ட சம்பளத்தை வாங்க மாட்டோம்’’ என்று கூறினார்.

    அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, ‘‘உயர்த்தப்பட்ட சம்பளம் வேண்டாம் என்றால் அதை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கொடுத்து விடுங்கள்’’ என்றார். இதற்கு மு.க.ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தார்.

    அதன்பிறகு நிதிநெருக்கடி காரணமாக உயர்த்தப்பட்ட சம்பளம் இதுவரை வழங்கப்படாமல் இருந்தது.

    இதற்கிடையே இந்த மாதம் முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் புதிய சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் 8 மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் வழங்கப்பட உள்ளது. இதற்கு பொதுத்துறை சார்பில் அரசாணை வெளியிட வேண்டும். இன்றோ அல்லது நாளையோ அரசாணை வெளியாகும் என்று தெரிகிறது.

    அதன்பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளத்துடன் ரூ.4 லட்சத்துக்கும் மேல் நிலுவைத் தொகையும் வழங்கப்பட உள்ளது. தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சுயேட்சை எம்.எல்.ஏ. தினகரன் ஆகியோர் தங்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தனர்.

    அதன்காரணமாக அவர்கள் அனைவருக்கும் புதிய சம்பளம் வழங்கப்படாமல் பழைய சம்பளம் வழங்க உத்தரவாகி உள்ளது.

    இதுதொடர்பாக சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது:-

    சம்பள உயர்வு வேண்டாம் என்று கூற எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரம் கிடையாது. அவர்கள் சம்பளத்தை விட்டுத்தருகிறேன் என்றுதான் கடிதம் கொடுக்க வேண்டும். அதன்படி தினகரன் கொடுத்துள்ள கடிதத்தை நிதித்துறை ஏற்றுள்ளது.

    தொழிலாளர்கள் பிரச்சனை தீரும் வரை சம்பள உயர்வு வேண்டாம் என்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரே கடிதத்தில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர். இதை நிதித்துறை ஏற்கவில்லை.

    ஒவ்வொருவரும் தனித்தனியாக சம்பளத்தை விட்டுத்தருவதாக கடிதம் அளிக்க வேண்டும். தொழிலாளர் பிரச்சனை தீரும் வரை என்றால் அதற்கான காலவரையறை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Tamilnews
    Next Story
    ×